

சீன அதிபர் ஜி ஜின்பிங், அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதற்காக சீன அதிபர் பெரிய தூதுக்குழுவுடன் இந்திய பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணமாக இது அமைவதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கான ஒரு புதிய அறிகுறியாகவும் இது அமையும்.
"சீன அதிகாரிகள் தங்கும் விடுதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை இறுதி செய்வதில் மும்முரமாக உள்ளனர்," என இதுகுறித்த விவரம் அறிந்த இந்திய வட்டாரங்களில் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு படிப்படியாகவே மேம்பட்டுள்ளது. மிக சமீபத்தில், ஒரு புதிய எல்லை தொடர்பான தகராறு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான ராஜதந்திர பரிமாற்றங்களை தூண்டியது.
2019-ஆம் ஆண்டில் சீன அதிபர் 200-க்கும் குறைவான அதிகாரிகளுடன் வந்திருந்த நிலையில், இந்த முறை ஜி ஜின்பிங்குடன் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழு இந்தியா வர வாய்ப்புள்ளதாக மற்ற இரண்டு இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லை மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நீண்டகாலக் கருத்து வேறுபாடுகளை கையாண்டுகொண்டே, ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வழிகளை ஆராய இரு நாடுகளின் அதிகாரிகளும் இந்த உச்சிமாநாட்டை பயன்படுத்தி கொள்வார்கள் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற வாய்ப்புள்ள இருதரப்பு சந்திப்புக்கான ஜி ஜின்பிங்கின் இறுதி பயண் திட்டங்களும் நிகழ்ச்சி நிரலும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
"சீனா, பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதில் தீவிரமாக பங்கேற்கிறது. மேலும் , இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தற்போதைய தலைமை பொறுப்பில் உள்ள இந்தியாவை ஆதரிக்கிறது," என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் பயணம் குறித்து "தற்போது எங்களிடம் வழங்குவதற்கு எந்த தகவலும் இல்லை" என்று அது கூறியது. 2025-இல் பிரேசிலில் நடைபெறவிருந்த கடைசி பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஜி ஜின்பிங் கலந்துகொள்ளவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை.