

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா மீண்டும் உரிமை கொண்டாடி உள்ளது.
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை 'ஜாங்னான்' அல்லது 'தெற்கு திபெத்' என்று சீனா வரையறுத்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சென் ஷியை மேற்கோள் காட்டி இந்தத் தகவலை சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்கு பிறகு சீனா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
10 நாட்கள் நடந்த தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியைப் பேணுதல், உள்ளூர் மோதல்களை தவிர்த்தல் மற்றும் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கடுமையான குளிர்காலம் தொடங்கவிருப்பதை கருத்தில் கொண்டு, எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இரு நாடுகளும் உரிமை கோரும் பகுதிகளில் ராணுவ ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, பெரும்பாலும் மோதல்களுக்கு வழிவகுக்கின்றன.
இவை குறித்த தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த சில தினங்களில் சீனா மீண்டும் இந்தியாவை சீண்டியுள்ளது விவாதப்பொருளாகி உள்ளது.
ஜாங்னான் பகுதி சீனாவின் ஒரு அங்கம் என்பதும், இந்தியா நிறுவியதாகக் கூறும் 'அருணாச்சலப் பிரதேசம்' என்ற பகுதியை அங்கீகரிக்கவில்லை என்பதுமே சீனாவின் நிலைப்பாடு.
அதே சமயம், சீனாவின் இந்தக் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்.
அருணாச்சலப் பிரதேசம் மீதான சீனாவின் உரிமைகோரல்களை இந்தியா முன்பே நிராகரித்துள்ளது.
இடங்களுக்குப் பெயர் மாற்றுவதால் யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் சீனா எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இவ்வாறு செய்து வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.