சீனப் பொருளாதாரத்தில் மந்தநிலை: சில்லறை விற்பனை மற்றும் தொழிற்துறை உற்பத்தி பெரும் வீழ்ச்சி!

இது ஜூன் மாதத்தின் 1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் மிகக் குறைவு.
Chinese economy
Published on

சீனப் பொருளாதாரம் ஆண்டின் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டும் கணிசமாகக் குறைந்து, பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கியுள்ளன.

மோசமான காலநிலை மாற்றங்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுத் தேவையில் தொடரும் பலவீனம் ஆகியவையே இந்த வீழ்ச்சிக்கு முதன்மை காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகப் புதிய தூண்டுதல் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.

சில்லறை விற்பனை

சீன தேசிய புள்ளியியல் வாரியம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் சீன தொழிற்துறை உற்பத்தி 4.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. இது ஜூன் மாதத்தில் பதிவான 5.3 சதவீத வளர்ச்சியை விடக் குறைவாகும். பொருளாதார நிபுணர்கள் 4.8 சதவீத வளர்ச்சியை எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தரவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல், நுகர்வோர் தேவையின் முக்கிய அளவீடான சில்லறை விற்பனை வெறும் 0.6 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இது ஜூன் மாதத்தின் 1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் மிகக் குறைவு. கோடைகால சுற்றுலா மற்றும் பயணங்கள் அதிகரித்தபோதிலும், மக்களின் வாங்கும் திறன் மேம்படவில்லை என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

முதலீடுகள் குறைவு

நாட்டின் நிலையான சொத்துகள் மீதான முதலீடு நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 6.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தூணாக விளங்கும் ரியல் எஸ்டேட் துறை இன்னும் மீள முடியாத நெருக்கடியில் நீடிக்கிறது. புதிய வீடுகளின் விலைகள் ஆண்டுக்காண்டு ஒப்பீட்டில் தொடர்ந்து சரிந்து வருகின்றன. நாட்டின் பெரும்பாலான குடும்பங்களின் சொத்து மதிப்பு ரியல் எஸ்டேட் துறையுடன் பிணைக்கப்பட்டுள்ளதால், வீடுகளின் மதிப்பு குறைவது நுகர்வோரின் செலவிடும் மனநிலையைப் பெருமளவில் பாதித்துள்ளது.

இயற்கை சீற்றங்கள்

சீனாவின் உற்பத்தி மையங்களாகத் திகழும் கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் தாக்கிய தொடர் சூறாவளிகள் மற்றும் கடுமையான மழைப்பொழிவு ஆகிய இயற்கை பேரிடர்களும் உற்பத்தியையும் விநியோகத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளன. இதன் காரணமாகப் பல லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் அனுப்பப்பட்டனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள், வரிகள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை சீனாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு கூடுதல் முட்டுக்கட்டைகளாக மாறியுள்ளன.

அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்

உள்நாட்டுத் தேவையை உடனடியாக ஊக்குவிக்க அரசு உடனடியாக நிதியுதவி மற்றும் வரிச்சலுகை திட்டங்களைச் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய புள்ளியியல் வாரியத்தின் செய்தி தொடர்பாளர், சந்தையில் நிலவும் இந்த மந்தநிலையைச் சமாளிக்கவும் உள்நாட்டு நுகர்வை உயர்த்தவும் எதிர்-சுழற்சி கொள்கை நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com