

லடாக் இந்தியாவின் “ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி” என்ற நிறுவப்பட்ட உண்மையை சீனத் தரப்பின் நடவடிக்கைகள் மாற்றிவிட முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் உள்ள 28 இடங்களுக்கு பெயர்களை அறிவித்த இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கையை “சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது” என்றும், பெய்ஜிங் லடாக்கை யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்கவில்லை என்றும் சீனப் பிரதிநிதி மாவோ நிங் தெரிவித்திருந்த நிலையில் வெளியுறவுத்துறையின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
லடாக் குறித்து சீனத் தரப்பு தெரிவித்த கருத்துகள் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளதாவது;
“லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. சீனத் தரப்பு எவ்வளவுதான் மறுத்தாலும், இந்த நிறுவப்பட்ட உண்மையை மாற்ற முடியாது.
உள்துறை அமைச்சகத்தின் பத்திரிகை அறிக்கை, தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள இருபத்து எட்டு இடங்கள் அல்லது நிலப்பகுதிகள், 'சர்வே ஆஃப் இந்தியா'வின் அதிகாரப்பூர்வ வரைபடத்தில் நிலையான பெயர்களுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பு தெரிவிக்கிறது
மேலும், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வே ஆஃப் இந்தியாவின் வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தின் இந்த இடங்களை முறையாக அடையாளம் காண்பதன் நோக்கம், அவற்றைத் துல்லியமாக அறிவதற்கும், பொதுமக்களிடையே அந்த இடங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் உதவுவதே ஆகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.