சிட்னியில் இருப்பதாக நாடகமாடிய வர்த்தகர்: ஐ.டி பிரிவு மூலம் அம்பலமான பகீர் உண்மை!

சிட்னியில் உள்ள வீட்டில் இருப்பதாகக் கூறிவிட்டு, சிங்கப்பூர் ஹோட்டலில் இருந்து கொண்டு அலுவலகப் பணிகளைச் செய்து வந்துள்ளார்.
Work from Home
Published on: 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த நாணய வர்த்தகரான சார்லஸ் கிராகாம், HIFX Australia என அழைக்கப்படும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அலுவலக விதிகளின்படி வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுமதியைப் பெற்றிருந்த இவர், சிங்கப்பூர் ஹோட்டலில் தங்கியிருந்து ரகசியமாக வேலை பார்த்தது நிறுவனத்தின் ஐ.டி பிரிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் உள்ள வீட்டில் இருப்பதாகக் கூறிவிட்டு, சிங்கப்பூர் ஹோட்டலில் இருந்து கொண்டு அலுவலகப் பணிகளைச் செய்து வந்துள்ளார். நவம்பர் 17 அன்று விடுமுறை முடிந்து அலுவலகப் பணிக்குத் திரும்பிய கிராகாம் ஆன்லைனில் இருக்கிறாரா என்பதை சோதிக்க, அவரது மேலாளர் அபிஜைல் பிளம்மர் நிறுவனத்தின் ஐ.டி பிரிவின் உதவியைக் நாடியுள்ளார்.

ஐ.டி துறையினர் மேற்கொண்ட சோதனையில், அவரது பணி லாப்டாப் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் நெட்வொர்க்கில் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பும் கூட, பாத்ரூம் பழுதுபார்ப்பதற்காக பிளம்பர்ஸ் வரவுள்ளதாகக் கூறிவிட்டு, பாலி தீவில் இருந்து கொண்டு வேலை பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன் மீதான பணிநீக்கத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்பு ஆணையத்தில் சார்லஸ் கிராகாம் வழக்குத் தொடர்ந்தார். கிராகாம் தனது இருப்பிடத்தை வேண்டுமென்றே மறைத்து பொய் கூறியது உண்மைதான் என்றும், அவரைப் பணிநீக்கம் செய்ய நிறுவனத்திற்குச் சரியான காரணங்கள் இருந்ததாகவும் ஆணையர் அலானா மத்சன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், நிறுவனமும் அவரைப் பணிநீக்கம் செய்யும் போது உரிய சட்ட நடைமுறைகளையும், முறையான விளக்கக் கேட்பு நடவடிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றவில்லை என்று ஆணையம் சுட்டிக்காட்டியது. இதனால், நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் கிராகாம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், அவருக்கு வேலை மீண்டும் வழங்கப்படவில்லை. மாறாக, முன்னறிவிப்பு இல்லாத பணிநீக்கத்திற்காக நான்கு வாரச் சம்பளம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது உலகளவில் 'வீட்டில் இருந்து வேலை' முறையைப் பின்பற்றும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com