

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மூலோபாயக் கூட்டாண்மை மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த நிலையில், இந்த 2026 ஆம் ஆண்டிற்குள் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் இதுவாகும்.
உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்த மாத இறுதியில் மார்கோ ரூபியோ இந்தியா வரவுள்ளார். இம்முறை அவர் மும்பை மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் ஆகிய நகரங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.
புதுடெல்லி மற்றும் பிராந்திய அளவிலான மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய நடப்பு விவகாரங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் இந்திய அரசு உயர் அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச உள்ளார்.
இருதரப்பு வணிக முதலீடுகள் மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவின் வருகைக்கு முன்னதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர் அதிகாரிகள் குழு இந்த வாரம் இந்தியா வரவுள்ளது. இக்குழு இந்திய அதிகாரிகளுடன் இணைந்து 'டிரஸ்ட்' எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பக் கூட்டாண்மை குறித்து ஆலோசிக்க உள்ளது.
கடந்த பிப்ரவரி இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர்கள் , செயற்கை நுண்ணறிவு , விண்வெளி, பயோடெக்னாலஜி போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அடித்தளம் அமைக்கப்படும்.
சமீபத்தில் அமெரிக்காவின் மொண்டானா மாகாண கவர்னர் கிரெக் ஜியான்ஃபோர்டே இந்தியா வந்திருந்தபோது, அமெரிக்காவில் எழுந்துள்ள இந்திய எதிர்ப்பு உணர்வலைகளால் இணையத்தில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "எங்கள் பயணம் ஒரே ஒரு நோக்கத்தைக் கொண்டது, மொண்டானா மற்றும் இந்தியாவின் கூட்டு நன்மைகளுக்காக வேலை செய்வது மட்டுமே.
நாம் இணைந்து செயல்படும்போது வேலைவாய்ப்புகளும், சிறப்பான ஆராய்ச்சிகளும் சாத்தியமாகும். இன்றைய காலகட்டத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தைச் செய்தாலும் சில எதிர்ப்புகள் வரத்தான் செய்யும், அதைப்பற்றி கவலை இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா வந்திருந்தபோது கொல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர் மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களுக்குச் சென்று 'குவாட்' கூட்டணி மற்றும் பாதுகாப்புத் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரூபியோ முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது ஜாம்நகர் வருகை இந்தியாவின் ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரிய எரிசக்தி நிறுவனங்களுடனான கூட்டணியை நோக்கியதாக இருக்கலாம் எனத் திரைமறைவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.