

பிரான்ஸ் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்துறை அமைச்சரின் ராஜினாமாவை அதிபர் மேக்ரான் நிராகரித்துள்ளார்.
பிரான்ஸ் முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூன்ஸின் ராஜினாமாவை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நிராகரித்துள்ளார்.
நாட்டில் அமைதியை நிலைநாட்டவும், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளிடையே வலுவான தலைமை மற்றும் தொடரைப் பராமரிக்கவும் நூன்ஸின் பதவிக்காலம் தொடர்வது அவசியம் என்று அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் தெரிவித்துள்ளது.
கொள்ளையர்கள் மற்றும் தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, புதிய, மேலும் வலுவான திட்டங்களை அவசரமாக வகுக்குமாறு அதிபர் மேக்ரோன் உள்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் பேசுகையில், ``போராட்டம் நடத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால், வன்முறை மூலம் திட்டமிட்டு அமைதியைச் சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
பிரான்சில் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பொது சேவைகள் மற்றும் பள்ளிகளின் மோசமான நிலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் 1000துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை முதல் வீதிகள் வன்முறைக் களமாகியுள்ளது.
முக்கிய நகரங்களில், போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதுடன், நகராட்சி அலுவலகங்களுக்கும் தீ வைத்தனர். வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். இருப்பினும் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவு கையை மீறி வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு, இச்சம்பவம் பிரான்ஸ் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் மேக்ரான், நாட்டை அழிப்பதே தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் என்றும், கலவரக்காரர்கள் தங்கள் குற்றங்களுக்கு கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பிரான்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசின் அணுகுமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இடதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான ஜீன்-லூக் மெலென்சோன், அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிவிட்டதாகவும், இந்தச் சம்பவம் அதன் நிர்வாக தோல்வியின் விளைவே என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேக்ரானின் மத்தியவாத அரசு முற்றிலும் செயலிழந்துவிட்டது என்றும், நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்ப்பதாகவும் தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லீ பென் விமர்சித்துள்ளார்.
அதேவேளையில், தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலன்சோன், பிரதமரின் தவறான அணுகுமுறையே இளைஞர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒன்றாகத் திரட்டியுள்ளது என்றும், இருப்பினும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கும் தங்கள் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "பிரான்ஸ் எரிகிறது! எல்லைகளை மூடி உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிரான்சில் குடியேறிய வெளிநாட்டவரே இந்த போராட்டத்திற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.