'பிரான்ஸ் கலவரத்திற்கு புலம்பெயர்ந்தோரே காரணம்' என டொனால்ட் டிரம்ப் சாடல்!

5.5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தின் உண்மை பின்னணி விலைவாசி உயர்வே தவிர குடியேற்றம் அல்ல.
FranceProtests - DonaldTrump
Published on: 
Summary

பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், இதற்கு அங்குள்ள புலம்பெயர்ந்தோரே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

டிரம்பின் பதிவு

பிரான்ஸ் கலவரம் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பிரான்ஸ் நாடு தற்போது எரிந்து கொண்டிருக்கிறது!

முற்றிலும் மாறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இதயங்களில் வெறுப்பை சுமந்து திரியும் மக்களின் வருகை, ஒரு காலத்தில் மிகச்சிறந்த நாடாக விளங்கிய பிரான்ஸை சீரழித்துவிட்டது.

நிலைமை கையை மீறிச் செல்வதற்குள் உங்கள் நாட்டின் எல்லைகளை மூடி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.

கலவரத்திற்கான உண்மையான பின்னணி

பிரான்சில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும், பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்தக் கோரியும் மாணவர்கள் நடத்திய போராட்டமே இதன் தொடக்கப் புள்ளியாகும். பின்னர், இது பொதுத்துறை ஊழியர்களின் சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு நாடு தழுவிய போராட்டமாக வெடித்தது.

தற்போது எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் கணக்குப்படி 5 லட்சத்து 50 ஆயிரம் பேரும், தொழிற்சங்கங்களின் கணக்குப்படி 8 லட்சம் பேரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விலைவாசி உயர்வு மற்றும் பொதுச்சேவைகள் குறித்தே உள்ளனவே தவிர, புலம்பெயர்ந்தோருக்கு எதிரானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த அமைதியான பேரணிகளின் இடையே புகுந்த வன்முறை கும்பல், பொது கட்டிடங்களுக்குத் தீ வைப்பது, கடைகளைச் சூறையாடுவது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மாபெரும் கைது நடவடிக்கைகளும் சேதங்களும்

வன்முறை காரணமாக பிரான்ஸ் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "வன்முறையில் ஈடுபட்ட சுமார் 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் செயல்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் பாரிஸில் மட்டும் சாதனை அளவாக 855 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள தெருக்களில் மிதிவண்டிகள், குப்பைத் தொட்டிகள் எரிக்கப்பட்டு போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன.

முகமூடி அணிந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கான கடைகளைச் சூறையாடியுள்ளனர். இந்த வன்முறையை ஒடுக்க முயன்றதில் சுமார் 500 போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.

துணை அதிபர் ஜே.டி.வென்ஸின் விமர்சனம்

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸும் இக்கலவரத்திற்குப் புலம்பெயர்ந்தோரே காரணம் என மறைமுகமாகச் சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கத்திய தாராளவாதிகள் பன்முகத்தன்மை மற்றும் இரக்கத்தின் பெயரால் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்குள் மூன்றாம் உலக மக்களை இறக்குமதி செய்தனர்.

ஆனால், அவர்கள் அந்த மக்களின் சமூக ஒருங்கிணைப்பு மற்றும் இணக்கத்தன்மை போன்ற அடிப்படைக் கேள்விகளைப் புறக்கணித்துவிட்டனர். இதன் விளைவு இப்படித்தான் இருக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அமெரிக்கர்கள் இதைக் கவனித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை

பிரான்சில் இன்னும் 6 மாதங்களில் அதிபர் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த வன்முறை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையாளர்கள் குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தாக்கியவர்கள், கடைகளைச் சூறையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, யூரோப்பகுதியின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான பிரான்ஸ் ஏற்கனவே கடன் சுமையிலும், எரிபொருள் விலை உயர்விலும் தவித்து வரும் வேளையில், இந்த வன்முறை அந்நாட்டை மேலும் நிலைகுலையச் செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com