மரண தண்டனைக்கு முன் காதலனை கரம் பிடித்த காதலி: ஈரானில் உருக்கம்!

மனித உரிமைகள் வழக்கறிஞரின் உதவியோடு அதிகாரிகள் இந்தத் திருமணத்திற்கு அனுமதி வழங்கினர்.
  Capital punishment
Published on: 
Summary

ஈரானில் போராட்டத்தில் பங்கேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அலிரேஜா செபாஹி மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மஹ்சத் கேஷானி ஆகிய காதலர்கள் சிறையிலேயே திருமணம் செய்துகொண்டனர்.

ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசி வாயிலாகத் திருமணம் நடைபெற்ற சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவே முடியாது என்பதை நன்கு அறிந்த அந்த இளம் காதலர்கள், சிறைச்சாலை தொலைபேசி வாயிலாகவே திருமண உறுதிமொழி ஏற்று முறைப்படி மணமுடித்துக் கொண்டனர். திருமணம் முடிந்தவுடன், அந்த இளைஞர் நேராக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

ஈரானைச் சேர்ந்த அலிரேஜா செபாஹி (25) மற்றும் மஹ்சத் கேஷானி (22) இருவரும் காதலர்களாவர். இவர்கள் இருவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டதன் காரணமாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செபாஹிக்கு மரண தண்டனையும், கேஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

விரைவில் செபாஹிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற பயமும் அச்சமும் கொண்ட கேஷானி, எப்படியாவது அவரைத் தன் கணவராக ஏற்றுக்கொள்வதற்காக சிறையிலேயே திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார்.

தொலைபேசி வழியே நிறைவேறிய சடங்குகள்

மனித உரிமைகள் வழக்கறிஞரின் உதவியோடு அதிகாரிகள் இந்தத் திருமணத்திற்கு அனுமதி வழங்கினர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரது தந்தையும் உடன் இருக்க, சிறைச்சாலை தொலைபேசி வாயிலாக இருவரும் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மணமகளின் வீட்டிலிருந்து குர்ஆன் பிரதி, சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் பாரம்பரிய வரதட்சணையாக வழங்கப்பட்டது.

திருமணம் குறித்து செபாஹியிடம் தொலைபேசியில் கூறப்பட்டபோது அவர் கண்ணீர் விட்டுத் கதறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், "நான் செபாஹியை முழுமையாகக் காதலிக்கிறேன்" என்று கேஷானி தனது உறுதியை வெளிப்படுத்தினார். இந்தத் திருமணத்தின் போது அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில் செபாஹிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்குச் சென்றிருந்தார். அந்தச் சூழலிலிருந்து அவர் மீண்டெழுந்த சில நாள்களிலேயே அவருடன் போராடிய மற்ற கைதிகளுடன் சேர்த்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com