

சமீபத்திய தொடர்ச்சியான ஆயுதச் சோதனைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையை நோக்கி பல புதிய அதிநவீன 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளதாகத் தென்கொரிய ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தொடர்ச்சியான ஆயுதச் சோதனைகளின் ஒரு பகுதியாக, வடகொரியா தனது கிழக்குக் கடற்கரையை நோக்கி பல புதிய அதிநவீன 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளைச் சோதனை செய்துள்ளதாகத் தென்கொரிய ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் சோதித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் வடகொரியா தனது விமான நிலையத்தை ஒரு முக்கிய ஏவுகணை ஏவுதளமாக பயன்படுத்தி வரும் நிலையில், தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாகத் தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்தனர். ஜப்பான் மற்றும் தென்கொரியா ராணுவத் தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 9.20 மணியளவில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் கிழக்குக் கடற்பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சில ஏவுகணைகள் 900 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் பயணித்துள்ளன. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே உள்ள கடற்பரப்பில் விழுந்ததாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், ஏவுகணைகளின் சரியான எண்ணிக்கை அல்லது அவை எவ்வளவு தூரம் பறந்தன என்பது குறித்த முழுமையான விவரங்களைத் தென்கொரிய கூட்டுப்படைத் தளபதிகள் உடனடியாகக் குறிப்பிடவில்லை.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் பல ஆண்டுகளாகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவு அளித்து வருவதுடன், அந்நாட்டின் ராணுவத்துடன் இணைந்து அவ்வப்போது போர் ஒத்திகைகளையும் நடத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஐந்து நாள்கள் கூட்டுப் போர்ச் பயிற்சியில் ஈடுபட்டன. இதில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவை கலந்துகொண்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தனது அணுஆயுத வல்லமையை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தடுத்து ஏவுகணைச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
வடகொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் திட்டத்துடன் தென்கொரியாவுடனான போர் பயிற்சியை நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு அறிவித்திருந்தார். இருப்பினும், நீண்டகாலமாக முடங்கியுள்ள ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கான சலுகைகளை வடகொரியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. கடந்த வாரம் தென்கொரியா தனது முதல் அதிநவீன ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை விமானத்தில் சோதனை செய்த சில நாள்களுக்குப் பிறகு, அதற்கு பதிலடியாக வடகொரியா இந்தச் சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த மாதம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் மூன்று தென்கொரிய வீரர்கள் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு மேலும் மோசமடைந்துள்ளது. வடகொரியா தனது அண்டை நாடான தென்கொரியாவைத் தனது நிரந்தர எதிரியாக அறிவித்துள்ளதோடு, அனைத்து ராஜதந்திர மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் முற்றிலுமாக துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.