

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நடுவானில் 9,000 அடி இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அயர்லாந்து வான்வெளியில் சுமார் 9,000 அடி உயரத்திற்குக் கீழ் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை சுமார் 11.50 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் முனையம் 5லிருந்து சிகாகோவிற்குப் புறப்பட்டது.
போயிங் 777 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் அயர்லாந்து வான்பரப்பில் சுமார் 37,000 அடி உயரத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது.
இதனால் சில நிமிடங்களிலேயே சுமார் 28,000 அடி வரை கீழே இறங்கி, 9,000 அடி உயரத்திற்கு வந்தது.
இதைதொடர்ந்து விமானிகள் உடனடியாக அவசரநிலையை அறிவித்தனர்.
விமானப் பயண கண்காணிப்புத் தரவுகளின்படி, விமானிகள், 'Squawk 7700' என்ற விமானப் போக்குவரத்து அவசரநிலைக் குறியீட்டை அனுப்பி வான்வழித் கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தனர்.
விமானத்தில் அவசர நிலை ஏற்படும்போது, உடனடி உதவி தேவை என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்க 'Squawk 7700' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பயணம் ரத்து செய்யப்பட்டு விமானத்தை திரும்பி லண்டனுக்கே கொண்டு வர உத்தரவானது .
விமானத்தின் எடையைக் குறைக்க கொஞ்சம் எரிபொருளை குறைக்க வேண்டும். இதற்காக விமானம் வான்பரப்பில் சில சுற்றுகள் சுற்றிவிட்டு, பின்னர் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.