

ஏமனின் ஈரான் ஆதரவுப்பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவை கடுமையாக தாக்கி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக தனது போர் விமானங்களை அரபு நாடுக்கு அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
சவுதிக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் டைஃபூன் விமானங்கள் இடைமறிக்கும் என்றும், ஏமனுக்குள் நேரடியாக தாக்குதல் நடத்தாது என்றும் பிரிட்டம் விளக்கம் அளித்துள்ளது.
“நமது நட்பு நாடான சவுதி அரேபியா மீது ஹூதிகள் நடத்தும் தொடர் தாக்குதல்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கவை” என்று இங்கிலாந்து பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக, ஹூதிகள் சவுதி அரேபியா மீதான தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எண்ணெய் மையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் ஏவி வருகின்றனர்.
சமீபத்திய வாரங்களில் ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர் . இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள ஹூதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தின் மீது சவுதி நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, செங்கடலில் உள்ள சவுதியின் கப்பல் போக்குவரத்தையும், ராச்சியத்திற்குள் உள்ள உள்கட்டமைப்புகளையும் குறிவைப்பதாக ஹூதிகள் அறிவித்ததிலிருந்து இந்த மோதல் தீவிரமடைந்து வருகிறது.
சவுதி மட்டுமின்றி ஏமனின் போர்க்களமான தென்கிழக்கு ஷப்வா மாகாணத்தில், ஹூதி அமைப்பினர் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட ஏமன் அரசுப் படையினர் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஏமனுக்கான அமெரிக்க தூதுக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது, “தங்கள் சமூகங்களையும், நாட்டையும் பாதுகாப்பதற்காக முன்வந்த ஏமன் மக்கள் மீது, ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிக் குழு நடத்திய “கோழைத்தனமான தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளது.