

வங்காள தேசத்தை சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், பெண்களுக்கு எதிரான கருத்துகளையும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கருத்துகளையும் பதிவிட்டதாக ஆஸ்திரேலியா செய்தி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யஹ்யா சின்வார் என்ற பயங்கரவாதியை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது.
இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதியின் இறப்பிற்கு தனது எக்ஸ் பக்கத்தில் வங்காள தேசத்தை சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இவர், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவுக்கும் எக்ஸ் தளத்தில் தனது அஞ்சலியை செலுத்தினார்.
இதையடுத்து இவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், நவீனத்துவம் என்ற பெயரில் பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது, விபச்சாரத்தின் மற்றொரு வடிவமாக இருப்பதாக பதிவிட்டார்.
இந்த நிலையில் இவர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, வங்காளதேச புலம்பெயர் மக்கள் மற்றும் இஸ்லாமிய மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இவர் கடந்த காலங்களில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து வங்காளதேச மதத்தலைவருக்கு இந்து மக்களும், யூத மக்களும் ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இவர் தனது பயணத்தை பாதிலேயே முடித்துவிட்டு வங்காளதேசம் திரும்பினார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பத்திரிக்கை வெளியிட்ட பதிவுகளுக்கு வங்காளதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் எக்ஸ் தளத்தில், ரஹ்மானால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் பதிவுகள் அனைத்தும், அவரது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்ட பிறகே பதிவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தெரிவித்துள்ளது.