ஈரானை விட்டு உடனே வெளியேறுங்கள் - தங்கள் குடிமக்களை அவசரப்படுத்தும் அமெரிக்கா

ஹவுதிகள் கடந்த வாரம் சவுதி அரேபியாவை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தினர்.
US Issues Urgent Exit Advisory
Published on
Summary

மேற்கு ஆசியாவில் போர் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் வசித்து வரும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேறும் படியும், மேலும் ஈரான் நாட்டிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும் படியும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் மீது ராணுவ மற்றும் கடல்சார் அழுத்தத்தை அமெரிக்கா தொடர்ந்து அளித்து வருகிறது. இதையடுத்து பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய அதிகாரிகள் எச்சரித்தனர்.

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

இந்த நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் மற்றும் எல்லைக் கடக்கும் இடங்களைப் பாதிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஈரானின் எல்லைகளில் உள்ள நடைமுறைகள் முன்னறிவிப்பின்றி மூடப்படும் என்றும் அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க பயணிகள் தாங்கள் நுழைய விரும்பும் எந்தவொரு நாட்டின் நுழைவுத் தேவைகளையும் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையங்களைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கை

இதுகுறித்து ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ”இந்த இராணுவ மோதல் விரைவாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியே உள்ள இடங்கள் உட்பட, தனது தூதரக வசதிகள் கடந்த காலங்களில் குறிவைக்கப்பட்டுள்ளன.

ஈரான் மற்றும் அதன் தலைநகர் தெஹ்ரானை ஆதரிக்கும் குழுக்கள் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நலன்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களைக் குறிவைக்கக்கூடும்.

பாதுகாப்பு குறித்த புதுப்பிப்புகளைப் பெறுவதற்கும், அவசர காலங்களில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பை எளிதாக்குவதற்கும், அமெரிக்கக் குடிமக்கள் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஸ்மார்ட் டிராவலர் என்ரோல்மென்ட் புரோகிராமில் (STEP) பதிவு செய்துகொள்ள வேண்டும்.

ஈரானில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பெரிய கூட்டங்கள் மற்றும் அதிக காவல்துறை பாதுகாப்பு உள்ள பகுதிகளை அமெரிக்க குடிமக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானில் வான்வழித் தாக்குதல் ஏற்படும் பட்சத்தில், ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிக் கதவுகளிலிருந்து விலகி இருக்குமாறும், கீழே விழும் சிதறல்களைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளைக் கண்காணிக்குமாறும் அமெரிக்கர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com