கொலம்பியா நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 69-ஆக உயர்வு

வாலே டெல் கௌகாவில் உயிரிழந்தவர்களில் குறைந்தது மூவர் குழந்தைகள் என்று ஆளுநர் தெரிவித்தார்.
Colombia earthquake rescue
Published on

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதிகளில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 69 பேர் உயிரிழந்தனர், மேலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கத்தால் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்; பலர் காயமடைந்தனர். தலைநகர் பொகோட்டா வரை உள்ள பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

107 கிலோமீட்டர் ஆழம்:

நிலநடுக்கத்தின் மையம், பொகோட்டாவில் இருந்து மேற்கே சுமார் 250 மைல் தொலைவில் உள்ள சோகோ பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் என்ற பகுதியில் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் கொலம்பியா தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்தன.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 66 மைல் (107 கி.மீ) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS கூறியது. மேலும், அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது, ஆனால் அங்கு மிகக் குறைந்த அளவிலான சேதங்களே பதிவாகின.

உயிரிழப்புகள்:

கடுமையாகப் பாதிக்கப்பட்ட பெரேரா நகரம் அமைந்துள்ள ரிசாரால்டா மாகாணத்தில் குறைந்தது 40 பேரும், கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரமான காலி அமைந்துள்ள வாலே டெல் கௌகா மாகாணத்தில் 27 பேரும் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மனிசலேஸ் நகரிலும் இருவர் உயிரிழந்தனர்.

வாலே டெல் கௌகாவில் உயிரிழந்தவர்களில் குறைந்தது மூவர் குழந்தைகள் என்று ஆளுநர் தெரிவித்தார். இந்த நிலநடுக்கம் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பெரேரா, குவிப்டோ, காலி மற்றும் மனிசலேஸ் ஆகிய நகரங்களைச் சிதைத்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படக்கூடிய அதிர்வுகள் குறித்த அதிகாரிகளின் அச்சங்களுக்கு மத்தியிலும், இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளிடையே குடியிருப்பாளர்களும் தேடுதல் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொலம்பியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதியை சுற்றியுள்ள கொலம்பியாவின் பசிபிக் பிராந்தியமானது, உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் நிகழும் இடமான பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நில அதிர்வு பிளவுகளின் மண்டலமான "ரிங் ஆஃப் ஃபயர்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com