கெய்ரோவில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி பெரும் தீ விபத்து: 31 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது.
Cairo Fire
Published on: 

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரை சுற்றியுள்ள முக்கிய நெடுஞ்சாலையில், எரிபொருள் டேங்கர் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எகிப்து தலைநகரை சுற்றியுள்ள முக்கிய பாதையான 'ரிங் ரோட்' பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில், குறைந்தது 21 பேர் காயமடைந்தனர். மேலும், இருபதுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து கருகின என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்:

இந்த விபத்து நடந்த நெடுஞ்சாலை பகுதி, கெய்ரோவின் பெருநகர பகுதியின் ஒரு அங்கமான கிசாவில் உள்ள, மக்கள் அதிகம் வசிக்கும் 'வாராக்' (Waraq) என்ற பகுதியில் அமைந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில், மீட்பு பணியாளர்கள் தீப்பிடித்த வாகனங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எகிப்திய அதிபர் அப்தெல்-ஃபத்தாஹ எல்-சிசி, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தார். உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கலேத் அப்தெல் கஃபார் கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், தானும் சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது கூறப்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை ஆரம்பகட்ட தகவல் மட்டுமே என்றும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

அடிக்கடி விபத்துகள்:

எகிப்தில் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் பலவீனமாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதிவேகம், மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தாமை ஆகியவை பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

கடந்த ஜனவரி மாதம், பெனி சுவேஃப் (Beni Suef) மாகாணத்திற்கு அருகில் உள்ள சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X