மகளிர் 20 ஓவர் உலககோப்பை- வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி

வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. #WomenWorldT20
மகளிர் 20 ஓவர் உலககோப்பை- வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி
Published on

கயானா:

6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் மோதின.

முதலில் விளையாடிய நடப்பு சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 104 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 83 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட்இண்டீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 60 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 31 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

‘ஹாட்ரிக்’ வெற்றி மூலம் வெஸ்ட்இண்டீஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 19.3 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் 5 புள்ளியுடன் இங்கிலாந்தும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறின.

தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் மோதும் ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இதனால் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

இந்த பிரிவில் நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து மோதுகிறது. இந்த ஆட்டத்தின் முடிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. நியூசிலாந்து 2-வது வெற்றிக்காகவும், அயர்லாந்து முதல் வெற்றிக் காகவும் காத்திருக்கிறது.  #WomenWorldT20

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com