

பெங்களூர்:
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், கடந்த மாதம் 24-ம் தேதி திடீரென காணாமல் போனார். இதுபற்றி அவரது கணவர், ராபர்ட்சன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடுத்த நாள் காலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காணாமல் போய்விட்டதாக கூறி அவரது தந்தை புகார் அளித்தார்.
விசாரித்தபோது காணாமல் போன பெண்ணுக்கும், சிறுவனுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்தது தெரியவந்தது. பஸ் நிலையத்தில் பதிவான சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், இருவரும் ஆந்திராவுக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.
ஓடிப்போன இருவரையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர். செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் பிடிக்க முடியவில்லை. இப்படி ஊர் ஊராகச் சென்று கடைசியில் நவம்பர் 13-ம் தேதி வேளாங்கண்ணியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது சிக்கினர்.
சிறுவனுடன் ஓடிப்போவது குற்றம் என்று போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அந்த பெண்ணோ, தான் அந்த சிறுவனை காதலிப்பதாகவும், திருமணம் செய்யப்போவதாகவும் கூறி அடம்பிடித்துள்ளார். இருவருக்கும் இடையே உடல்ரீதியான தொடர்பு வைத்திருந்ததை மருத்துவ பரிசோதனையும் உறுதி செய்தது. இதனால், வேறு வழியின்றி, போக்சோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் அந்தப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.