அரசு பெண் டாக்டர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை கொள்ளை

புதுவையில் பட்டப்பகலில் அரசு பெண் டாக்டர் வீட்டின் கதவை உடைத்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரசு பெண் டாக்டர் வீட்டில் ரூ.12 லட்சம் நகை கொள்ளை
Published on

புதுச்சேரி:

புதுவை கிருஷ்ணா நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாஜு பீட்டர். இவரது மனைவி லதா சூகி. இவர்களில் சாஜு பீட்டர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார். லதா சூகி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ஓமியோபதி டாக்டராக இருக்கிறார்.

இவர்களது சொந்த ஊர் மாகி ஆகும். அங்கு புதிதாக வீடு கட்டி வருகின்றனர். அதன் பணிகளை கவனிப்பதற்காக சாஜு பீட்டர் அங்கு சென்று விட்டார்.

கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் லதா சூகியும், அவரது மகனும் இருந்தனர். லதா சூகி தினமும் காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு மதியம் 2 மணி அளவில் வீடு திரும்புவது வழக்கம்.

நேற்று அதேபோல் காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரது மகனும் வெளியே சென்று விட்டார். அவர்களது வீடு 2 மாடி கொண்டதாகும்.

மதியம் 2.30 மணியளவில் லதா சூகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார். அப்போது வீட்டின் உள் அறையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கிருந்த பீரோவும் திறந்து கிடந்தது. வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.

பீரோவில் 60 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன. அவற்றை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருந்தனர். இவற்றின் மதிப்பு ரூ. 12 லட்சம்.

லதா சூகி வீட்டை பூட்டி விட்டு சென்ற பிறகு வீட்டின் பின்பக்க வழியாக வந்து பின்பக்க கிரில் கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கதவை நெம்பி திறந்து கொள்ளையர்கள் உள்ளே வந்துள்ளனர்.

இது தொடர்பாக லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டை இன்று சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு லதா சூகிக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த வாரம் தான் சபாநாயகர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து புதுவையில் கொள்ளைகள் நடப்பதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறினார். அதற்குள் அவரது தொகுதியிலேயே கொள்ளை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com