

லாடர்ஹில்:
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக் கெட் அணி வெஸ்ட்இண்டீசுடன் மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.
இதன் முதல் இரண்டு 20 ஓவர் போட்டியும் அமெரிக்காவில் நடத்தப்படுகிது. அந்நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இந்திய அணி சமீபத்தில் உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்று ஏமாற்றம் அளித்தது. உலக கோப்பைக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 20 ஓவரில் 11 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா-5, வெஸ்ட் இண்டீஸ் 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.
இந்த போட்டியில் ரோகித் சர்மா அதிக சிக்சர் அடித்த கிறிஸ்கெய்லின் (வெஸ்ட் இண்டீஸ்) சாதனையை முறியடிப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கெய்ல் 105 சிக்சர் அடித்து 20 ஓவர் சர்வதேச போட்டியில் முதல் இடத்தில் உள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 103 சிச்சருடன் 2-வது இடத்திலும், ரோகித் சர்மா 102 சிக்சருடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 4 சிக்சர் அடித்தால் கெய்லின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடிப்பார். அவர் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராக இருக்கிறார்.