கர்நாடக மந்திரி வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்ன? - வருமான வரித்துறை மவுனம்

கர்நாடக மந்திரி வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்ன? - வருமான வரித்துறை மவுனம்

கர்நாடக மந்திரி வீட்டில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், பணம், நகை கைப்பற்றப்பட்டது குறித்தும் வருமான வரித்துறை இன்னும் அறிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
Published on

பெங்களூரு:

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரு அருகே சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்த கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினார்கள்.

அவரது தம்பியும், எம்.பி.யுமான சுரேஷ், எம்.எல்.சியான ரவி, ஜோதிடர் துவாரகநாத், மைசூருவில் உள்ள மந்திரி சிவகுமாரின் மாமனார் திம்மையா வீடு, தொழிற்சாலை மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை 3 சூட்கேஸ்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும், பணம், நகை கைப்பற்றப்பட்டது குறித்தும் இதுவரை வருமான வரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து சோதனை நடத்திய வருமானவரித்துறை அதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்காமல் மவுனமாக சென்று விட்டனர்.

மந்திரி வீட்டில் சிக்கிய ஆவணங்கள் குறித்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக அமலாக்கப்பிரிவினர் மந்திரி சிவகுமாரிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று சோதனை முடிந்த பிறகு மந்திரி சிவகுமார் குடும்பத்தினருடன் சென்று தும்கூரு மாவட்டம் திப்டூர் தாலுகா, நொடவின கேரவில் உள்ள காடசித்தேஸ்வரா ஆசிரமத்தில் சிறப்பு யாகம் நடத்தினார்.

இதே ஆசிரமத்தில் ஏற்கனவே கர்நாடக முதல் மந்திரிகளாக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, மராட்டிய முன்னாள் முதல் மந்திரி விலாஸ்ராவ் தேஸ்முக், பீகார் முதல் மந்திரி நிதிஸ்ஷ்குமார் ஆகியோர் தங்களுக்கு சோதனை ஏற்பட்ட காலங்களில் இங்கு வந்து சித்தேஸ்வரரை வழிபட்டு யாகம் நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருமான வரித்துறை சோதனை குறித்து மந்திரி சிவகுமார் கூறும்போது என் வீட்டில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஆதாரத்துடன் பதில் அளிப்பேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com