கவர்னர் கிரண்பேடியை மாற்ற அனுமதிக்க மாட்டோம்- ஓம்சக்தி சேகர்

புதுவையில் மிக நல்ல முறையில் பணியாற்றி வருகின்ற கவர்னர் கிரண்பேடியை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என ஓம்சக்தி சேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடியை மாற்ற அனுமதிக்க மாட்டோம்- ஓம்சக்தி சேகர்
Published on

புதுச்சேரி:

முன்னாள் மாநில அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசின் சீர்கேடுகளை சுட்டி காட்டி புதுவை மாநிலத்தை கவர்னர் கிரண்பேடி திறம்பட வழி நடத்தி செல்வதை சகித்து கொள்ள முடியாத ஆட்சியாளர்கள், அவரை மாற்ற முயற்சித்து வருகிறார்கள்.

சமூக வலைதளம், நேரடி ஆய்வு, அதிரடி நடவடிக்கை என்று பல்வேறு நிலைகளில் மக்களிடம் தினமும் தொடர்பில் இருக்கும் கிரண்பேடி பிற மாநில கவர்னர்களுக்கு எல்லாம் எடுத்துகாட்டாக திகழ்ந்து வருகிறார்.

சென்டாக் முறைகேடுகளை கண்டறிந்து புதுவை மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க செய்தது, புதுவை மாநிலத்தை சுத்தமான மாநிலமாக மாற்றும் முயற்சி, வறண்டு கிடந்த ஏரிகளை தூர்வாரி நீர் நிலைகளை ஏற்றம் பெற செய்தது, சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து சில ஏரிகளை கைப்பற்றி பொதுமக்கள் பயனுக்கு அளித்தது, தினமும் பொதுமக்களின் குறைகளை கவர்னர் மாளிகையில் கேட்டு அதனை நிறைவேற்றுவது என்று பல்வேறு வளர்ச்சி பாதைக்கான நடவடிக்கைகளை புதுவை மக்கள் பெரிதும் வரவேற்று வரும் நிலையில் கவர்னர் மாற்றம் பற்றி வரும் செய்தி ஏற்புடையது அல்ல.

கவர்னரின் அதிரடியான நியாயமான நடவடிக்கைகளை புதுவை ஆளும் காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் மிக நல்ல முறையில் பணியாற்றி வருகின்ற கவர்னரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். புதுவை மாநிலத்திற்கு கவர்னர் கிரண்பேடி இன்னும் பல்வேறு பணிகள் ஆற்ற வேண்டிய கடமையும், சூழ்நிலையும் உள்ளது. எனவே புதுவை அ.தி.மு.க. என்றும், கவர்னர் கிரண்பேடி அவர்களுக்கு துணை நிற்கும். புதுவை மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அவரை மாற்ற புதுவை அ.தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது.

இது தொடர்பாக புதுவை சட்டமன்றத்திலும் கழக எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்.

இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com