அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி நீடிக்கிறது- வானதி சீனிவாசன்

அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி நீடிக்கிறது என்று அக்கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்
Published on

சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளான த.மா.கா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சி தலைவர்களை அ.தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

இதையடுத்து அந்த கட்சிகள் ஆதரவும் தெரிவித்து விட்டன.

அ.தி.மு.க. தரப்பில் இருந்து பா.ஜனதா தலைவர்களை யாரும் சந்திக்கவில்லை. பா.ஜனதாவும் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. எனவே பா.ஜனதா தனித்து போட்டியிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆதரவு கேட்டனர்.

தமிழக பா.ஜனதாவுக்கு தலைவர் இல்லாததால் சந்திக்கவில்லை என்று அ.தி.மு.க. தரப்பில் விளக்கமும் அளித்தனர். ஆனாலும் இதுவரை பா.ஜனதா மவுனமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறும்போது, “அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி நீடிக்கிறது. இடைத்தேர்தலில் ஆதரவு பற்றி நேற்றே முடிவு செய்யப்பட்டு விட்டது” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com