தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு

குண்டர் சட்டத்தை பயன்படுத்தி தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது: வைகோ குற்றச்சாட்டு
Published on

செங்குன்றம்:

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை சந்திக்க இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புழல் ஜெயிலுக்கு வந்தார்.

காலை 10 மணியளவில் அவர் திருமுருகன் காந்தியை சந்தித்தார். பின்னர் அவர் 11.45 மணிக்கு திரும்பி வந்தார். அப்போது வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சர்வாதிகார போக்கில் ஜனநாயகத்திற்கு விரோதமாக அடக்கு முறைகளை ஏவி கருத்து சுதந்திரத்தை பறிக்க முயற்சி செய்கிறது.

முள்ளி வாய்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் நானும் கலந்து கொள்வேன். ஓவியர் வீர சந்தானம் முதல் ஆளாக கலந்து கொள்வார்.

இந்த ஆண்டு மெரீனா கடற்கரையில் மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட போது போலீசார் தாக்கியதோடு குண்டர் சட்டத்தையும் ஏவியது கொடுமையான அக்கிரமம்.

ஜனநாயகத்தை முறியடிக்க இது புதிய அடக்கு முறை. பொடா சட்டத்தில் நானும் 19 மாதம் ஜெயிலில் இருந்து உள்ளேன்.

திருமுருகன் காந்தி மீதான வழக்கு வருகிற 30-ந் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கதிராமங்கலம் பிரச்சனைக்காக துண்டு பிரசுரம் வினியோகித்ததாக கரூர் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது அடக்குமுறை நடவடிக்கை. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

எடப்பாடி அரசுக்கு தெரிவித்து கொள்வது என்னவென்றால் மக்கள் மன்றமும், இளைஞர்களும் அரசு மீது கடுமையான ஆத்திரத்தில் உள்ளனர். எனவே அடக்குமுறையை அரசு கைவிட வேண்டும். இந்த அரசை அடக்கமுறை அரசு என்ற குற்றசாட்டை வைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வைகோவுடன் மாவட்ட செயலாளர் டி.சி.ராஜேந்திரன், பகுதி செயலாளர் ஏ.வி.ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com