

லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ ஜெயிலில் உள்ள 2 கொலை கைதிகள் தங்களது கைகளில் துப்பாக்கியை வைத்தபடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கைதிகள் 2 பேரும் ஜெயில் வளாகத்தில் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி மாநில அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார்கள். ‘ஜெயில் எங்களது அலுவலகம். எங்களுக்கு எதிராக யார் பேசினாலும் ஜெயிலில் இருந்தபடியே அவர்களை கொலை செய்ய முடியும்’ என்று கூறுகிறார்கள்.
மேலும் கைதிகள் ஜெயிலில் உல்லாச வாழ்க்கை வாழ்வதும் தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் கவுரவ் பிரதாப்சிங், அம்ரிஷ் என்பது தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி மாநில உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. அதில் கைதி இருவரும் போலி துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளதாகவும் சிறை நிர்வாகத்தை மிரட்டுவதற்காக இதுபோன்ற வீடியோ எடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கி என்றும் போலியானது போல் இல்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து அமிர்ஷ் மீரட் ஜெயிலுக்கும், கவுரவ் பிரதாப்சிங் லக்னோ ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.