ஊரடங்கில் மாற்றங்கள் குறித்து இப்போது கூற முடியாது - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஊரடங்கில் மாற்றங்கள் செய்வது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
Published on

உலகையே இன்றளவிலும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனையும் (வயது 55) தாக்கியது. இது கடந்த மாதம் 26-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.  உடனே அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. மேலும் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன் பலனாக அவர் விரைவாக குணம் அடைந்தார்.

அப்போது அவர் தனக்கு சிகிச்சை அளித்து, உயிரைக்காப்பாற்றிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப்பணியாளர்கள் அனைவருக்கும் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் கடன்பட்டுள்ளதாக உருக்கமுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் செக்கர்ஸ் பகுதியில் உள்ள கிராமப்புற ஓய்வு இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவர் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு திரும்பினார்.

முன்னதாக அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நாடு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டு வருவதாக கூறினார். அதே நேரத்தில் ஊரடங்கு கொள்கையில் மாற்றங்களை எவ்வாறு, எவ்வளவு விரைவாக அரசாங்கத்தால் கொண்டு வர முடியும்? என்பதை இன்னும் தீர்மானிக்கமுடியவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “எவ்வளவு விரைவாக அல்லது மெதுவாக அல்லது எப்போது இதில் மாற்றங்கள் செய்ய முடியும் என்பதை இப்போது கூற முடியாது. வரவிருக்கும் நாட்களில் அரசாங்கம் இதுபற்றி அதிகமாக தெரிவிக்கும். இது தொடர்பான முடிவுகள் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடன் எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.

பிரதமர் பொறுப்பை இதுவரை கவனித்து வந்த வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் கருத்து தெரிவிக்கையில், “பிரதமர், பணிக்குத் திரும்பி இருப்பது அரசுக்கும் நாட்டுக்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்” என குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நிழல் கேபினட் மந்திரி ரெய்ச்சல் ரீவ்ஸ் கருத்து தெரிவிக்கையில், “பெல்ஜியம், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் உதாரணத்தை இங்கிலாந்து பின்பற்ற வேண்டும். டென்மார்க்கில் சில வர்த்தக நடவடிக்கைகள், பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அரசாங்கம் இதற்கான திட்டத்துடன் வர வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com