கம்பம் பகுதியில் 2 பிரிவினர் மோதல்: இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு

கம்பம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டதுடன் இன்ஸ்பெக்டரும் தாக்கப்பட்டார்.
கம்பம் பகுதியில் 2 பிரிவினர் மோதல்: இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
Published on

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் காட்டுபள்ளிவாசல் அருகே தாத்தப்பன்குளம் பகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. தற்போது ரம்ஜான் பண்டிகை என்பதால் பெண்கள் தொழுகைக்கு சென்று வந்தனர். அவ்வாறு சென்ற பெண்களை சிலர் கேலி செய்துள்ளனர்.

இது குறித்து புகார் அளிப்பதற்காக ஒரு தரப்பினர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சப்-இன்ஸ் பெக்டர் இத்ரீஸ்கானுக்கு உத்தரவிட்டார். அவரது தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் 2 தரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரை யொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தவாறே தெருவுக்குள் சென்று மக்கள் அமைதியாக இருக்கும்படி கூறினர்.

அந்த சமயத்தில் மர்ம நபர்கள் சிலர் தற்காலிக மின் துண்டிப்பை ஏற்படுத்தி போலீஸ் வாகனம் மீதும் போலீசார் மீதும் கற்களையும், கம்புகளையும் வீசினர்.

இதில் போலீஸ் வாகனம் சேதம் அடைந்ததுடன் இன்ஸ்பெக்டர் உலகநாதனின் மண்டை உடைந்தது. மேலும் டி.எஸ்.பி. அண்ணாமலை என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் விரைந்தனர். மேலும் மோதல் ஏற்படாத வகையில் ஏ.டி.எஸ்.பி. பழனிகுமார் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கலவரம் வெடிக்காமல் இருக்க தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த மோதலில் சாலையில் நிறுத்தி இருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் சேதம் அடைந்தன. தெரு முழுவதும் கலவரக்காரர்கள் வீசிய கற்கள் சிதறி கிடந்தன.

இச்சம்பவம் நேற்று இரவே தேனி மாவட்டம் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. இதனால் தேனி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இரவு நேரத்தில் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com