நீதிமன்றம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்: தினகரன் பேட்டி

இந்த ஆட்சி நீதிமன்றம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி வீட்டுக்கு அனுப்பப்படும். அப்போது மத்திய அரசின் ஆதரவு இருக்காது என்பது அவர்களுக்கு தெரியவரும் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
நீதிமன்றம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி எடப்பாடி அரசு வீட்டுக்கு அனுப்பப்படும்: தினகரன் பேட்டி
Published on

தஞ்சாவூர்:

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் கோட்டை விட்டார்களோ, அதேபோல தற்போது மழைக்காலத்திலும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நாம் அச்சப்பட்டதை போன்று உயிர்பலி நடக்கிறது. மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இந்த அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று தமிழக மக்கள் கூறி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அரசின் துரோக நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த ஆட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். தங்களை காப்பாற்றிக் கொள்ளவே மத்திய அரசு, பிரதமரின் பெயரை கூறிக்கொண்டு மத்திய அரசு ஆதரவு உள்ளதாக கூறிவருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்ளவும், தாங்கள் நினைத்ததை செயல்படுத்தவும் காவல்துறையை பயன்படுத்தி வருகிறார்கள்.

நிச்சயம் இந்த ஆட்சி நீதிமன்றம் மூலம் ஓட்டெடுப்பு நடத்தி வீட்டுக்கு அனுப்பப்படும். அப்போது மத்திய அரசின் ஆதரவு இருக்காது என்பது அவர்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: தமிழகத்தில் நிரந்தர கவர்னரை நியமித்தும், இந்த ஆட்சி மீது நடவடிக்கை இல்லையே?

பதில் : ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மேலும் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து முடிவு செய்யாமல் ஓட்டெடுப்பு நடத்த முடியாது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்தில் தை பிறந்தால் நல்லது நடக்கும். இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்களே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

மன்னார்குடி, நாகை போன்ற பகுதிகளில் விவசாயத்துக்கு எதிராக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செயல்படுகிறது. இதை மத்திய-மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சோதனை என்ற பெயரில் விவசாய நிலங்களை பயன்படுத்துவதை கண்டித்து பொதுச்செயலாளர் சசிகலா ஆணைப்படி அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தஞ்சை மாவட்ட மக்களுடன் இணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com