தினகரன் அணிக்கு தற்காலிகமாக கட்சி பெயர், சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் கமிஷன்

டி.டி.வி.தினகரன் அணிக்கு தற்காலிகமாக கட்சி பெயர், தேர்தல் சின்னம் ஒதுக்க முடியாது என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தினகரன் அணிக்கு தற்காலிகமாக கட்சி பெயர், சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் கமிஷன்
Published on

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இடைக்கால மனுவாக தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரையில், தங்கள் அணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தற்காலிகமாக கட்சி பெயரை வழங்கவேண்டும் என்றும், உள்ளாட்சி தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட பிரஷர் குக்கர் சின்னத்தை தங்கள் அணிக்கு ஒதுக்கவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதில் கட்சிக்கு அகில இந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம் என்னும் 3 பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ரேகா பாலி அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

இந்த மனு மீதான விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில், “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அல்லது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் கமிஷன் தேர்தல் சின்னம் அல்லது கட்சிக்கு பெயரை ஒதுக்கீடு செய்யும். ஆனால் டி.டி.வி.தினகரன் அணி இந்த இரண்டில் எந்தப்பிரிவிலும் வரவில்லை. எனவே அவருடைய அணிக்கு தற்காலிகமாக கட்சி பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய இயலாது” என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், “இதுபோன்ற இடைக்கால மனுவை அவர்கள் (டி.டி.வி. தினகரன் அணி) சென்னை ஐகோர்ட்டில்தான் தாக்கல் செய்திருக்கவேண்டும். ஏனென்றால் இப்பிரச்சினை முழுவதும் தமிழகத்துக்குள் அடங்கியதாக உள்ளது. மேலும் தினகரன் அணி தெரிவித்த 3 பெயர்களில் ஒன்றான அகில இந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற பெயர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை போன்றே உள்ளது. இது கட்சி பதிவு ‘டிரேட் மார்க்’ விதிமுறைகளை மீறுவதாகும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com