122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது: டி.டி.வி. தினகரன்

தியாகத்துக்கும்- துரோகத்துக்கும்தான் யுத்தம் நடைபெறுகிறது. 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
தேனியில் நிருபர்களுக்கு டி.டி.வி.தினகரன் பேட்டியளித்த காட்சி.
தேனியில் நிருபர்களுக்கு டி.டி.வி.தினகரன் பேட்டியளித்த காட்சி.
Published on

தேனி:

அ.தி.மு.க. (அம்மா) அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தஞ்சை மண்ணில் பிறந்தாலும் பாண்டிய நாட்டை நேசிப்பவன். முதன் முதலில் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா என்னை நிறுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலடி கொடுப்பதற்காக நான் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். சிலர் பதவி ஆசைக்காகவும், தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் சுய நலத்துடன் செயல்படுகின்றனர்.

வாக்களித்த வாக்காளர்களின் மனநிலை என்ன என்பதை அனைவரும் அறிவர். கட்சியின் நலன் கருதி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க பொதுச்செயலாளர் சசிகலா எனக்கு அனுமதி அளித்துள்ளார். நான் ஜோதிடரோ அல்லது அரசியல் வல்லுனரோ அல்ல. சாதாரண அரசியல்வாதிதான்.

பொதுச்செயலாளரை நீக்க வேண்டும் என்று ஒன்று சேர்ந்து சொல்வது சுயலாபத்துக்காகத்தான். எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்கள் என 90 சதவீதம் பேர் எங்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

தற்போது நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி இல்லை. துரோக ஆட்சிதான் நடக்கிறது. துரோகத்துக்கும், தியாகத்துக்குமான யுத்தம் நடைபெறுகிறது. இதில் சசிகலா வெற்றி பெறுவார்.

புதுச்சேரியில் தங்கியுள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவிக்காகவோ, பணத்துக்காகவோ தங்கவில்லை. கட்சியை காக்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தியாகத்தோடு சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் நீங்கள் சேர்ந்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர். மனதில் பட்டதை துணிச்சலாக கூறுபவர். நான் எப்போதும் அவரை மதிப்பவன். இது அவரது சொந்த கருத்து. இது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com