நடந்தது இணைப்பே இல்லை, பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம் - டி.டி.வி. தினகரன் ஆவேசம்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது காட்டமான கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நடந்தது இணைப்பே இல்லை, பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம் - டி.டி.வி. தினகரன் ஆவேசம்
Published on

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது காட்டமான கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இரண்டு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க இன்று இணைந்தது. ஓ.பன்னீர் செல்வம் துணை முதல்வராகவும், மா.பா. பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றார். ஆனால், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆதரவாளர்களை புறக்கணிக்கும் நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கான வேலைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இரு அணிகள் இணைப்பால் அதிருப்தியில் உள்ள டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: -

இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுயலாபத்திற்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.

1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, ஜெயலலிதா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்

ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின் பன்னீர்செல்வத்தையும் பின் பழனிச்சாமியையும் முதல்வராக்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்த நபர்களை கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள்

இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள், இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?

நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும்.

துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com