

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மீத்தேன் எரிவாயு எடுக்கும் முயற்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்துக்கு வைகோ, சீமான், ஜி.கே.வாசன், திருமாவளவன், ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வழிநடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே 19-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றுடன் போராட்டம் 264-வது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை டி.டி.வி.தினகரன் கடந்த 2-ந் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவையாறு பகுதியில் பிரசாரம் செய்தார்.
இதையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேறக் கோரி போராட்டம் நடந்து வரும் கதிராமங்கலம் கிராமத்துக்கு தினகரன் இன்று மதியம் சென்றார்.
அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தினகரனிடம் ஒரு பாட்டிலில் தினமும் குடிநீர் கலங்கலாக வருவதை காண்பித்து குறைகளை தெரிவித்தனர். மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
அப்போது தினகரன் , கதிராமங்கலம் கிராம மக்களின் போராட்டத்துக்கு தனது ஆதரவு என்றும் உண்டு’ என்று தெரிவித்தார்.
தினகரனுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வடக்கு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி , திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ். மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதன்பின்னர் தினகரன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம். கதிராமங்கலம் மக்களுடன் கடைசி வரை இருப்போம். இந்த மக்களுடன் எங்களது படை துணையாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:-தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் ஆட்சி மாற்றம் வருமா?
பதில்:- அ.தி.மு.க.வில் 6 பேரை தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். எனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்னுடன் வந்த 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரைத்தான் முதல்வராக ஆக்குவேன்.
கேள்வி:- அந்த 6 பேர் யார்?
பதில்:- அவர்களும் ஒருவேளை திருந்தி வரக்கூடும் என்பதால் பெயர்களை என்னால் சொல்ல முடியாது.
கேள்வி:- கோவை பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ஊழல் குற்றச்சாட்டில் உங்களது அணியை சேர்ந்த ஒருவரும் உள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்:- துணைவேந்தர் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
கேள்வி:- விசாரணை கமிஷன் முன்பு நாளை சசிகலா ஆஜராவாரா?
பதில்:- அவருக்கு பதில் அவரது வக்கீல் நேரில் ஆஜராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-
காவிரி படுகை பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சிகள், அமைப்புகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மத்திய பெட்ரோலிய துறை மந்திரி பேசும் போது, ‘தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வர மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மறைமுகமாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 110 இடங்களில் எரிவாயு எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் 6 மண்டலங்களில் எரிவாயு எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் மட்டுமன்றி நீராதாரமும் முற்றிலும் அழிந்து விடும். உணவு தட்டுப்பாடும் ஏற்படும். கதிராமங்கலம் போராட்டத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்து செல்வோம். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறும் வரை போராட்டம் தொடரும்.