

சென்னை:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘முத்தலாக்’, சட்டவிரோதம் என்று அறிவிக்கும் வகையில் மத்திய அரசு இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர கோலமாகவும், அலங்கோலமாகவும் கொண்டு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் நாட்டின் தனிச்சிறப்பு. இதில் இஸ்லாமிய மக்களின் சம்பிரதாயமான ‘முத்தலாக்’ முறையில் பாதிப்போ, குறைபாடோ இருந்தால், இஸ்லாம் மக்களின் கருத்தினைக்கேட்டு, அதன்படி ஒரு பாதுகாப்பு அம்சத்தை வழங்குவதுதான் ஏற்புடையது.
ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட முன்வடிவு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ‘முத்தலாக்’ சொல்லும் கணவனுக்கு 3 ஆண்டு சிறை என்கிற கிரிமினல் நடவடிக்கை மசோதாவில் இடம்பெற்றிருக்கிறது. இது நடைமுறைக்கு வரும்போது பெருமளவில் தவறாகத்தான் பயன்படுத்தப்படும்.
‘முத்தலாக்’கில் புகார் வந்தவுடனேயே கைது என்று சொல்வது, ஒரு சிவில் நடைமுறையில் கிரிமினல் நடவடிக்கை என்பதாக மாறி, ஒரு மதத்தினர் மீது மத்திய அரசு கொண்டுள்ள வேற்றுமையைத்தான் காட்டும். இதில் பொய் புகாருக்கு உள்ளாக்கப்படும் இஸ்லாமிய கணவருக்கு எவ்வித பாதுகாப்பு அம்சமும் இல்லை என்பது இச்சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு ஆகும்.
சகோதர நேசத்துடன் இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் இந்தியா போன்ற நாட்டில், இஸ்லாமியர்கள் பின்பற்றும் நடைமுறையில், உள்ளபடியே ஏதேனும் குறை இருந்தால், அதனை அதீத அக்கறையுடனும், பொறுமையுடனும் நிவர்த்தி செய்திடும் வகையில் மத்திய அரசு சிந்தித்திட வேண்டும். குறிப்பாக, தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்ட முன்வடிவினை அனைத்து மாநில வட்டார மொழிகளில் உள்ள பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி அதன் மூலம் இஸ்லாமியர்களின் கருத்து கேட்கப்பட்டு அதன்பின்னரே மத்திய அரசு அதனை சட்டமாக்கிட வேண்டும்.
அதற்குரிய கால அவகாசத்தையும் ஏற்படுத்திட வேண்டும். வேற்றுமை எண்ணம் எவருக்கும் ஏற்படா வண்ணம் பாதுகாத்திட வேண்டும். அதன் மூலம் நாட்டில் மத ஒற்றுமையை வலிமைப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.