

இந்தத் தொடர் வன்முறைகளின் போது பல்வேறு நகரங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டோ உள்ளதாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பிரான்ஸில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பள்ளிகளின் மோசமான கட்டமைப்புப் பிரச்னைகளுக்கு எதிராகக் கடந்த சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் பொதுமக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்பாராதவிதமாகப் பெரும் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து பாரீஸ், லியோன், மாா்ஸெய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வன்முறைக் கும்பல்கள் வீதிகளில் இருந்த மிதிவண்டிகள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்ததுடன், கடைகளையும் அடித்து நொறுக்கிப் பொருட்களைக் கொள்ளையடித்தன. இந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,400 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தொடர் வன்முறைகளின் போது பல்வேறு நகரங்களில் சுமாா் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது கொள்ளையடிக்கப்பட்டோ உள்ளதாகக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கான தார்மீகப் பொறுப்பேற்று, பிரான்ஸ் உள்துறை அமைச்சா் லாரென்ட் நுனெஸ் தனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் அளித்தார். எனினும், அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் இமானுவல் மேக்ரான் ஏற்க மறுத்துவிட்டார். மேலும், உளவுத்துறை மூலம் முன்கூட்டியே தகவல்களைப் பெற்று வன்முறையைத் தடுக்கத் தவறியதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்யுமாறு உள்துறை அமைச்சருக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் பாரீஸில் மூத்த அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், அந்நாட்டுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோா்னு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த சனிக்கிழமை அன்று மிகப்பெரிய அளவில் வன்முறை ஏற்பட்டபோதிலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், பிரான்ஸில் மேலும் கலவரங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்வதைத் தடுப்பதற்காக, மாகாண அதிகாரிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தேவைக்கேற்ப ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.