கூட்டணி இல்லாததால் த.வெ.க.வின் சொந்த பலத்தை அறிய முடிந்தது- அமைச்சர் என்.ஆனந்த்

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் த.வெ.க. தொண்டர்கள் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி வருவதாகக் கூறினார்.
அமைச்சர் என்.ஆனந்த்
அமைச்சர் என்.ஆனந்த்
Published on: 
Summary

தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு சில காரணங்களால் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் போய்விட்டது. அதுவும் நல்லதுக்குதான். த.வெ.க.வின் சொந்தப் பலத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை ஆதரித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விநாயகத்தை ஆதரித்து த.வெ.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் பேசியதாவது:-

28 தொகுதிகளில் டெபாசிட்

புதுச்சேரியில் 28 தொகுதிகளில் த.வெ.க. போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் வாங்கியது. மேலும், பாதி பேர் எம்.எல்.ஏ.க்கள் ஆவதற்கும், பாதி பேர் எம்.எல்.ஏ.க்களாக ஆக முடியாமல் போனதற்கும் த.வெ.க. காரணமாக இருந்துள்ளது.

சொந்த பலம்

கடந்த பொதுத் தேர்தலின்போதே விநாயகம் த.வெ.க. சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் இப்போது இடைத்தேர்தலே வந்திருக்காது. இப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விநாயகம் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறுவார். தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு சில காரணங்களால் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் போய்விட்டது. அதுவும் நல்லதுக்குதான். த.வெ.க.வின் சொந்தப் பலத்தை அறிந்து கொள்ள முடிந்தது.

விஜய்

எங்கள் தலைவர் ஜோசப் விஜய்யின் முகத்துக்கும், அவருடைய ஒரு சொல்லுக்காகவும் தமிழகத்தில் 108 இடங்களில் த.வெ.க. வெற்றி பெற்றது. அப்போது எந்தக் கூட்டணியிலும் த.வெ.க. இல்லை. ஆட்சி அமைக்கும்போது ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி ஆதரவு கொடுத்தார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தவெக

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் த.வெ.க. தொண்டர்கள் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி வருவதாகக் கூறினார். த.வெ.க. தொண்டர்களுக்கு உண்மை, நேர்மை மட்டும்தான் தெரியும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு ஒரு சில நாட்கள்தான் இருக்கின்றன. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் வெற்றி பெற கடுமையாக உழைப்போம். மேலும், தமிழகத்திலும் புதுச்சேரியில் தவெக, காங்கிரஸ் கூட்டணியாக இருந்து 2031-ல் ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com