இன்றும் அழியாத சுவடுகள்... வங்க கடல் பிரசவித்த பேரழிவுப் புயல்கள்

2008-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் வங்கக்கடலில் உருவான நர்கிஸ் புயல், மே மாதத் தொடக்கத்தில் மியான்மரைத் தாக்கியது.
புயல்கள்
புயல்கள்
Published on: 
Summary

வங்க கடல் மட்டும் ஏன் இப்படி? புயல் அரக்கர்களை பிரசவித்து பூமியில் மக்களை துவம்சம் செய்கிறது? வங்க கடலில் உருவான பல புயல்கள் கோர தாண்டவமாடி பூமியில் பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளது.

வங்க கடலில் உருவாகி வரும் ‘அர்னாப்’ புயல் என்ன பாடுபடுத்துமோ தெரியலையே என்ற பீதி எல்லோரிடமும் இருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டில் புயல் ஆபத்து இருக்காது என்று தெரிவித்து இருப்பது நிம்மதியை கொடுத்தாலும் ஆந்திரா, ஒடிசாவில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்களே! அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள் தானே...!

இந்த வங்க கடல் மட்டும் ஏன் இப்படி? புயல் அரக்கர்களை பிரசவித்து பூமியில் மக்களை துவம்சம் செய்கிறது? வங்க கடலில் உருவான பல புயல்கள் கோர தாண்டவமாடி பூமியில் பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளது.

அதுபற்றி இலக்கியங்களிலும், வர லாறுகளிலும் இடம் பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

கன்னியாகுமரிக்கு தெற்கே பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பு கடலில் மூழ்கியதாகவும் அது குமரிக்கண்டம் என்றும் இலக்கிய பதிவுகள் சொல்கிறது. அதே போல் பாண்டியர்கள் ஆட்சியில் தென் பகுதியை கடல் மூழ்கடித்துள்ளது. அது மட்டுமல்ல சோழர்களின் புகழ் பெற்ற துறைமுக நகரமான காவிரி பூம்பட்டினமும் கடலால் அழிந்து போனதாக மணிமேகலை காப்பியம் சொல்கிறது.

இந்தியாவில் 1785-ம் ஆண்டு முதல் தான் வானிலை கண்காணிப்பு முறைகள் தொடங்கி இருக்கிறது. முதலில் கொல்கத்தாவிலும் அடுத்ததாக

வானியல் கண்காணிப்பு

1783-ம் ஆண்டு சென்னையிலும் வானியல் கண்காணிப்பு நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1864-ம் ஆண்டு அக்டோபரில் கல்கத்தாவையும், நவம்பரில் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தையும் அடுத்தடுத்து இரண்டு கடுமையான புயல்கள் தாக்கின. ஏராளமான உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டன.

இதையடுத்து 1865-ம் ஆண்டு புயல் எச்சரிக்கை முறையை உருவாக்குவதற்காக ஆங்கிலேய அரசு ஒரு குழுவை அமைத்தது. அதன் பரிந்துரையின்படி ெகால்கத்தா துறைமுகத்தில் இந்தியாவின் முதல் புயல் எச்சரிக்கை முறை நடைமுறைக்கு வந்தது.

வானிலை ஆய்வு

இந்தப் பின்னணியில்தான் 1875-ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறை உருவாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வானிலை ஆய்வுப் பணிகள் ஒரே மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அதன் முதல் வானிலை அறிக்கையாளராக ஹென்றி பிரான்சிஸ் பிளான்போர்ட் நியமிக்கப்பட்டார்.

புயல் எச்சரிக்கை

1878-ம் ஆண்டு தினசரி வானிலை அறிக்கைகள் வெளியிடப்படத் தொடங்கின. 1886-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துத் துறைமுகங்களுக்கும் புயல் எச்சரிக்கை முறை விரிவுபடுத்தப்பட்டது. 1891-ஆம் ஆண்டு முதல் புயல்கள், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் குறித்த விரிவான விவரங்கள் அறிக்கைகளில் இடம்பெறத் தொடங்கின.

வங்கக்கடல்

1891 முதல் 2000 வரையிலான 110 ஆண்டுகளில் வங்கக்கடலில் மட்டும் 1,087 முறை காற்றழுத்த மாற்றங்களால் புயல் உருவாகக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளன. 279 முறை புயல்கள் உருவாகியுள்ளன. மேலும் 173 முறை தீவிரமான புயல்கள் உருவாகியுள்ளன. அதாவது, இந்த 110 ஆண்டுகளில் வங்கக்கடலில் மொத்தம் 452 புயல்கள் உருவாகியுள்ளன. வங்கக்கடலில் ஆண்டுக்குச் சராசரியாக 10 முறை புயல் உருவாகக்கூடிய வானிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புயல்கள்

1965 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் வங்கக்கடலில் ஆண்டுக்குச் சராசரியாக 8 முறை புயல் உருவாகக்கூடிய சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 3 முதல் 4 முறை புயல்கள் உருவாகியுள்ளன. அரபிக் கடலைவிட வங்கக்கடலில் தான் அதிகமான புயல்கள் உருவாகின்றன என்பது வானிலை ஆய்வுத் துறையின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.

வங்கக்கடலில் அதிக புயல்கள் உருவாவது ஏன்?

இந்தியாவின் இருபுறமும் கடல்கள் இருக்கின்றன. மேற்கே அரபிக்கடல், கிழக்கே வங்கக்கடல். ஆனால் அரபிக்கடலைவிட வங்கக்கடலில்தான் அதிகமான புயல்கள் உருவாகின்றன. இதற்கு என்ன காரணம்?

முதலில் கடல் நீரின் வெப்பம் முக்கியமான காரணம். புயல்கள் உருவாவதற்குக் கடலின் மேற்பரப்பு நீர் போதுமான அளவு வெப்பமாக இருக்க வேண்டும். வங்கக்கடலில் பல மாதங்கள் கடல் நீர் அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. இந்த வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே எழுகிறது. அந்த ஈரப்பதமான காற்று மேகங்களாகத் திரண்டு, சாதகமான சூழலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெறுகிறது.

வெப்பம்

அடுத்ததாக, வங்கக்கடலில் கலக்கும் ஆறுகளின் நீரும் முக்கியமானது. கங்கை, பிரம்மபுத்திரா, ஐராவதி உள்ளிட்ட பெரிய ஆறுகள் வங்கக்கடலில் கலக்கின்றன. இதனால் கடலின் மேற்பரப்பில் உப்புத்தன்மை குறைகிறது. சில நேரங்களில் மேற்பரப்பிலுள்ள வெப்பமான நீர், ஆழத்திலுள்ள குளிர்ந்த நீருடன் எளிதில் கலக்காமல் இருக்க இது உதவுகிறது. இதனால் புயலுக்குத் தேவையான வெப்பம் கடலின் மேற்பரப்பில் நீடிக்க வாய்ப்புள்ளது.

பருவமழை

மேலும், பருவமழைக் காற்றுகளும் வங்கக்கடலில் புயல்கள் உருவாவதற்குச் சாதகமாக இருக்கின்றன. குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் காற்றின் திசை, ஈரப்பதம், கடல் வெப்பம் போன்றவை சாதகமாக அமையும்போது புயல்கள் உருவாகின்றன. ஏப்ரல், மே மாதங்களிலும் புயல்கள் உருவாகக்கூடும்.

1876-ம் ஆண்டு அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் உருவான புயல், இன்றைய வங்கதேசத்தின் பேக்கர்கஞ்ச் பகுதியில் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இருந்தது.

கடல் நீர்

புயலின்போது கடல் நீர் பொங்கி எழுந்து கடலோரக் கிராமங்களுக்குள் புகுந்தது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. குடிநீர் ஆதாரங்கள் உப்புநீரால் பாதிக்கப்பட்டன. புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நோய்களும் உயிரிழப்புகளை அதிகரித்தன. இந்தப் பேரழிவில் சுமார் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

மிட்னாப்பூர்

1942-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல், அன்றைய வங்காள மாகாணத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. இன்றைய மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. இந்த புயல் சுமார் 15,000 பேரை காவு கொண்டது.

போலா புயல்

1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான போலா புயல், அன்றைய கிழக்கு பாகிஸ்தானை, அதாவது இன்றைய வங்கதேசத்தைத் தாக்கியது. நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய இந்தப் புயலின்போது கடல் நீர் பல மீட்டர் உயரத்துக்குப் பொங்கி எழுந்தது. தாழ்வான தீவுகளும் கிராமங்களும் கடல்நீரில் மூழ்கின. வீடுகள், படகுகள், கால்நடைகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

இந்தப் புயலில் 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. உலக வரலாற்றில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய புயலாக போலா புயல் இடம்பெற்றுவிட்டது.

ஆந்திரப் பிரதேசம்

1977-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான இன்னொரு வலிமையான புயல் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. குறிப்பாக கிருஷ்ணா நதியின் முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள திவிசீமா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இப்புயலின் பேரழிவில் சிக்கி 10,000 பேர் உயிரிழந்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் வரலாற்றில் மிகப்பெரிய புயல் பேரழிவுகளில் ஒன்றாகத் திவிசீமா புயல் இன்றும் நினைவுகூரப்படுகிறது.

இலங்கை

1978-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைத் தாக்கியது. குறிப்பாக மட்டக்களப்பு, கல்குடா உள்ளிட்ட பகுதிகள் பெரும் அழிவைச் சந்தித்தன. நவம்பர் 24-ஆம் தேதி மட்டக்களப்பு அருகே கரையைக் கடந்த இந்தப் புயலின்போது மணிக்கு சுமார் 170 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயலில் 915 பேர் உயிரிழந்தனர்.

சிட்டகாங்

1970-ம் ஆண்டு போலா புயல் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து மீண்டு வந்த வங்கதேசத்தை, 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு அதிதீவிர புயல் தாக்கியது. ஏப்ரல் 29-ஆம் தேதி சிட்டகாங் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளைத் தாக்கிய இந்தப் புயலில் சிக்கி சுமார் 1.38 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

பாரதீப்

1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கக்கடலில் உருவான சூப்பர் புயல், ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது. அக்டோபர் 29-ந்தேதி பாரதீப் அருகே கரையைக் கடந்த இந்தப் புயலால் 9,893 பேர் உயிரிழந்தனர். சுமார் 1.57 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

நர்கிஸ் புயல்

2008-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் வங்கக்கடலில் உருவான நர்கிஸ் புயல், மே மாதத் தொடக்கத்தில் மியான்மரைத் தாக்கியது. குறிப்பாக ஐராவதி நதியின் டெல்டா பகுதி பெரும் அழிவைச் சந்தித்தது. இந்தப் பேரழிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் சேர்த்து சுமார் 1.38 லட்சம் பேர். மியான்மரின் நவீன வரலாற்றில் மிக மோசமான இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக நர்கிஸ் புயல் பதிவாகியுள்ளது.

டிட்வா புயல்

கடந்த (2025) ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், இலங்கையைப் பெரும் பேரழிவுக்குள் தள்ளியது. நவம்பர் 28-ந்தேதி இலங்கையின் கிழக்குக் கடற்கரையைக் கடந்த இந்தப் புயலால் நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மத்திய மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகளால் ஏராளமானோர் உயிரிழந்தனர். கொழும்பு, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பேரழிவில் 649 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 173 பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமார் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட இந்தப் பேரழிவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் முழுமையாகவோ பகுதியாகவோ சேதமடைந்தன. இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால வரலாற்றில் மிக மோசமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுப் பேரழிவுகளில் ஒன்றாக டிட்வா புயல் பதிவானது.

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை புரட்டிப்போட்டு இன்றும் எல்லோரது நினைவுகளிலும் இடம் பிடித்த பல்வேறு புயல்களின் தாக்கம் மேற்குறிப்பிட்ட படங்களில் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com