திருமணமான பெண்ணிடம் இப்படியொரு கேள்வியா? HR அதிகாரியின் செயலால் வெடித்த சர்ச்சை!

பெண்களின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இத்தகைய கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
 Married woman
Published on: 
Summary

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தைப் பற்றிப் பேசும் நிறுவனங்களே இதுபோன்ற பாலின அடிப்படையிலான மற்றும் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்புவது முரணாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைவாய்ப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பெண் ஒருவரிடம், மனிதவளத்துறை அதிகாரி எழுப்பிய தனிப்பட்ட மற்றும் எதிர்பாராத கேள்வி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தொழில்முறைத் திறமைகளை மதிப்பிடுவதை விட்டுவிட்டு, பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பத் திட்டமிடல் குறித்து நேர்காணல்களில் கேள்வி எழுப்பும் நடைமுறைக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சதகஷி திவேதி என்ற பெண்மணி தான் முகம்கொண்ட இந்த அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலின் ஆரம்பத்தில் வழக்கமான தொழில்முறை சார்ந்த வினாக்களே எழுப்பப்பட்டுள்ளன. அவர் வசிக்கும் இடம், அலுவலகத்திற்கு வந்து செல்வதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு அவர், தனது கணவரும் அதே பகுதிக்குத் தான் பயணிக்கிறார் என்பதால் போக்குவரத்து தனக்குப் பிரச்னையல்ல என்று இயல்பாகப் பதிலளித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் இடையில் சதகஷிக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது என்ற விபரம் தெரியவந்ததும், மனிதவளத்துறை அதிகாரியின் அணுகுமுறை முற்றிலும் மாறியுள்ளது. நேர்காணலின் மையக்கருவிலிருந்து விலகி, அந்த அதிகாரி நேரடியாகவே, "உங்களுக்கு இதைக் கேட்பதில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, என்றாலும் கேட்கிறேன்... உங்களுக்கு இப்போதைக்குப் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் எதுவும் இல்லையே, தனா?" என்று கேட்டுள்ளார். இந்த எதிர்பாராத கேள்வியால் அதிர்ந்துபோன அந்தப் பெண், வேலைவாய்ப்பின் போது ஊழியரின் திறமையை அளவிடாமல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் குறிவைப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தைப் பற்றிப் பேசும் நிறுவனங்களே இதுபோன்ற பாலின அடிப்படையிலான மற்றும் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்புவது முரணாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பெண் பயனர்கள் தங்களது சொந்த வேலைவாய்ப்பு நேர்காணல் அனுபவங்களை வெளிப்படையாகப் பகிரத் தொடங்கினர்.

திருமணமாகாத பெண்களிடம் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்றும், திருமணமான பெண்களிடம் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம் பற்றியும், தாய்மார்களிடம் வேலைக்கும் குழந்தைகளுக்கும் எப்படி சமநிலைப்படுத்துவீர்கள் என்றும் வெவ்வேறு கட்டங்களில் தொடர்ச்சியாக இதுபோன்ற சங்கடமான கேள்விகள் எழுப்பப்படுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

வேலைக்கான தகுதியை மட்டும் ஆராய வேண்டிய நேர்காணல் அறைகளில், வேட்பாளர்களின் பிரைவசி எனப்படும் தனிப்பட்ட எல்லைகளை மீறும் வகையில் இதுபோன்று கேள்விகள் கேட்கப்படுவது சட்டவிரோதமானது மற்றும் அநாகரிகமானது என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பெண்களின் தொழில் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இத்தகைய கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com