‘கல்வியே கடவுள்’, ‘போய் படிடா தம்பி’ வாசகங்களுடன் அசத்தும் வினோத விநாயகர் சிலை!

மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
 Vinayagar idol
Published on

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு விழாவையொட்டித் தமிழகத்தின் பல பகுதிகளில் விதவிதமான மற்றும் வினோதமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். சினிமா, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி, நடப்புச் சூழலுக்கு ஏதுவாகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விநாயகர் சிலை ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கல்வியின் அவசியம்

சென்னை மணலி பெரியதோப்பு பகுதியில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கைகளில் புத்தகங்கள் ஏந்தியவாறும், வழிபாட்டுடன் சேர்த்துப் படிப்பே வாழ்வின் மிக முக்கிய தெய்வம் என்பதை உணர்த்தும் வகையிலும் ‘கல்வியே தெய்வம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செல்போன் மற்றும் தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிடும் இளைய தலைமுறையினரைத் தட்டி எழுப்பும் வகையில் ‘போய் படிடா தம்பி’ என்ற சுவாரஸ்யமான அறிவுரை வாசகமும் விநாயகர் சிலையின் பீடத்திலும் பின்புறத்திலும் இடம்பெற்றுள்ளது.

பக்தியோடு சேர்த்து இளைய சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை அப்பகுதி மக்களும், குறிப்பாக மாணவர்களும் ஆர்வத்துடன் கண்டு தரிசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்சிலையின் புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், "இதுபோன்ற அர்த்தமுள்ள விழிப்புணர்வு சிலைகளே இக்காலத்திற்குத் தேவை" எனக் கருத்து தெரிவித்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com