இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்

விசா மூலம் பலமுறை இந்தியாவிற்குள் வந்து செல்லும் வசதியும் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த ‘இ-குழு வருகை விசா’ அறிமுகம்
Published on

இந்தியாவை உலகின் முன்னணி சொகுசுக் கப்பல் சுற்றுலாத்தலமாக மாற்றும் நோக்கில், நிர்ணயிக்கப்பட்ட பயணத்திட்டத்துடன் சொகுசு கப்பல்களில் வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளுக்காக ‘இ-குழு வருகை விசா’ எனும் புதிய வசதியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்னணு விசா

தற்போது மின்னணு சுற்றுலா விசா பெறத் தகுதியுள்ள 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் இந்தத் பிரத்யேக விசா வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விசாவைப் பெறும் வெளிநாட்டுப் பயணிகள், மின்னணு விசா வசதி கொண்ட நாட்டின் 38 குறிப்பிட்ட துறைமுகங்கள் வழியாக இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். 30 நாட்கள் செல்லுபடியாகும் இந்த விசா மூலம் பலமுறை இந்தியாவிற்குள் வந்து செல்லும் வசதியும் வழங்கப்படுகிறது.

சொகுசுக் கப்பல்

சொகுசுக் கப்பல் இந்திய துறைமுகத்திற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, கப்பல் நிறுவனம் அல்லது அதன் முகவர் இதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட இணையதளம் அல்லது செயலி வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

கியூ.ஆர் குறியீடு

இந்த காலக்கெடுவிற்குப் பிறகு புதிய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஒரு குழு விசாவில் எத்தனை சுற்றுலா பயணிகள் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால் இதற்கு எவ்வித உச்சவரம்பும் இல்லை.

இணைய தளம்

வெளிநாட்டுப் பயணிகளின் விவரங்கள் அனைத்தும் மொத்தமாக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த விசா சான்றிதழில் கியூ.ஆர் குறியீடு இடம்பெற்றிருக்கும். இதைப் பயன்படுத்தி பயணிகள் குடிவரவு, சோதனைச்சாவடிகள் மற்றும் பயணத் திட்டத்தின் படியான உள்நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

பொருளாதார நன்மைகள்

எளிதாக்கப்பட்ட விசா மற்றும் குடிவரவு நடைமுறைகள் சர்வதேச சொகுசு கப்பல் நிறுவனங்கள் தங்களது பயணத்திட்டத்தில் இந்திய துறைமுகங்களைச் சேர்க்க ஊக்குவிக்கும் என்றும், இதன் மூலம் துறைமுகங்கள், விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து மற்றும் உள்ளூர் சமூகங்களுக்குப் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் சுற்றுலா

இந்தியாவின் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை மற்றும் 400 நதிகளை இணைக்கும் உள்நாட்டு நீர்வழிகளைப் பயன்படுத்தி சொகுசு கப்பல் சுற்றுலாவை உயர்த்த அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சுற்றுலாத் துறை

குறிப்பாக, 2029-க்குள் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் நோக்கில் ‘க்ரூஸ் பாரத் மிஷன்’ மற்றும் கடல்சார் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலான திட்டங்கள் மூலம் இந்தியாவின் சுற்றுலாத் துறை புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com