

சிவமொக்கா தசரா ஊர்வலத்தில் கட்டுப்பாட்டை இழந்த யானை மிரண்டோடியதில் 650 கிலோ வெள்ளி அம்பாரி கீழே விழுந்தது.
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற தசரா பெருவிழா ஊர்வலத்தின் போது எதிர்பாராதவிதமாக யானை ஒன்று மிரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யானையின் மீது கட்டப்பட்டிருந்த 650 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட வெள்ளி அம்பாரி கீழே சரிந்து விழுந்ததுடன், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.
விழாவின் ஒரு பகுதியாக அலங்கரிக்கப்பட்ட யானை மீது வெள்ளி அம்பாரி (அம்பாரி என்பது யானையின் மீது வைக்கப்படும் பாரம்பரிய இருக்கை மேடை) வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது. அப்போது கூட்ட நெரிசல் மற்றும் சத்தத்தால் 'சோமண்ணா' என்ற அந்த யானை திடீரென நிலைதடுமாறி மிரண்டு ஓடத் தொடங்கியது.
சாலையில் பீதியுடன் ஓடிய யானையைக் கண்ட மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். யானையின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தக் கால்நடை மருத்துவக் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு அதற்கு மயக்க மருந்து செலுத்தினர். இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அமைதிப்படுத்தப்பட்ட சோமண்ணா யானை, தற்போது சிவமொக்காவில் உள்ள புகழ்பெற்ற கோட்டை சீதாராம் ஆஞ்சநேயர் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. யானை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்குச் சிவமொக்கா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் நேரில் சென்று நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் தசாரா ஊர்வலப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.