

நாகர்கோவில்:
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்து விட்டது. இதற்கு கூட்டணி கட்சிகள் ஒப்புதல் வழங்கி விட்டதாக அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க.வின் தலைவர்களையும் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் ஆதரவு கேட்டனர். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை அ.தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கேட்கவில்லை.
அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா இடம் பெற்றிருந்தாலும், வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பகிரங்கமாக களம் இறங்கவில்லை.
இது போல நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும், பாரதிய ஜனதாவை தள்ளி வைக்க அ.தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க.வின் கூட்டணி தொடருகிறது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இப்போது பாரதிய ஜனதாவுக்கு மாநில தலைவர் யாரும் இல்லை. இதனால் தான் அ.தி.மு.க. நிர்வாகிகள் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பு ஏற்படவில்லை, என்று கூறினார்.
அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கட்சிகள் இடையேயான உறவு எப்படி இருக்கிறது? இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் ஆதரவை அ.தி.மு.க. கேட்டதா? நிர்வாகிகளை சந்தித்து பேசினார்களா? என்பது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கட்சிகளிடையே பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி உருவாக்கப்பட்டது. இன்று வரை இந்த கூட்டணி தொடருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்குமாறு பாரதிய ஜனதா கட்சியினரை இதுவரை அ.தி.மு.க. கேட்கவில்லை.
நானும், அ.தி.மு.க. தலைவர்களிடம் இதுபற்றி பேசவில்லை. எங்கள் கட்சி காஷ்மீரில் 370-வது சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது பற்றி மக்களுக்கு விளக்கும் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இது போல காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளோம்.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம் என்பதால் அ.தி.மு.க. பிரசாரத்திற்கு பாரதிய ஜனதாவை அழைக்கவில்லை என்பதும், நாங்குநேரி தொகுதியில் கிறிஸ்தவர்கள் வாக்கு அதிகம் என்பதால் எங்களை அழைக்கவில்லை என்பதையும் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
இதற்கு முந்தைய தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் வாக்களித்துள்ளனர்.
அதே நேரம் அனைத்து இந்துக்களும் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் வாக்களிக்கவில்லை. நாங்கள் மத ரீதியாக எந்த பாகுபாட்டையும் பார்க்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருந்த போது, சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர்.
அ.தி.மு.க. எங்களிடம் ஆதரவு கேட்காவிட்டாலும், அவர்களுக்காக நாங்கள் தேர்தல் பணி செய்வோமா? என்பது பற்றி தேசிய தலைவர்களின் முடிவை பொறுத்தது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதனை நாங்கள் செய்வோம்.
அ.தி.மு.க.வுக்கும், எங்களுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை. அவர்களுக்கு வேண்டுமானால் சில யோசனைகள் இருக்கலாம். அவர்கள் எங்களின் தேசிய தலைவர்களை சந்தித்து பேசினார்களா? என்பது எனக்கு தெரியாது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் அ.தி.மு.க. அமைச்சர்கள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. தலைவர்களை சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர்களும் எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். நாங்களும் கூட்டணியில் இருக்கிறோம். எனவே அ.தி.மு.க.வையும், தமிழக அரசையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பாரதிய ஜனதா தலைவர்களை சந்திக்காதது ஏன்? என்பது பற்றி நீங்கள் அ.தி.மு.க.விடம் தான் கேட்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் பாரதிய ஜனதா கூட்டணி தொடருமா? என்பதை உள்ளாட்சி தேர்தல் நடக்கும் போது தெரியும். உள்ளாட்சி தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் என்பது வேறு. எனவே அதற்கேற்ப நாங்கள் அப்போது முடிவு செய்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.