நெல்லை, தென்காசியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சென்ற பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையான செங்கோட்டை, தென்காசி பஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

செங்கோட்டை:

நாடு முழுவதும் மத்திய அரசின் பொருளாதார கொள்கை உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து அமல்படுத்துதல், மோட்டார் வாகன திருத்த சட்டம் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது.

கேரளாவிலும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கார், ஆட்டோ, பஸ் மற்றும் லாரிகள் உள்ளிட்டவை கேரளாவில் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு சென்ற பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லையான செங்கோட்டை, தென்காசி பஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து காலை 5 மணி முதல் கேரளா மாநிலம் அச்சன்கோவில், கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம், எர்னாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட இருந்த கேரள பஸ்கள் அனைத்தும் செங்கோட்டை பணிமனையில் நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் வழக்கம்போல் பேருந்துகள், லாரிகள் ஓடினாலும் கேரளாவில் நடத்தப்பட்ட முழு கடையடைப்பு காரணமாக செங்கோட்டை வரையே பஸ்கள் இயக்கப்பட்டன. கேரளாவிற்கு செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகளும் செங்கோட்டை தாண்டி செல்ல அனுமதிக்கப்படவில்லை. கேரளாவிற்கு சரக்குகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் புளியரை சோதனை சாவடியை கடந்து சென்றாலும், கேரள சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்பட்டது. அவை அனைத்தும் சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை. அவை வழக்கம்போல் சென்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com