திருப்பதியில் இலவச தரிசனத்தில் நேரம் குறிப்பிடப்பட்ட நடைமுறை தொடர வேண்டும்: பக்தர்கள் வரவேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கப்பட்டுள்ள டைம் ஸ்லாட் நடைமுறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் தொடர வேண்டும் எனப் பக்தர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் இலவச தரிசனத்தில் நேரம் குறிப்பிடப்பட்ட நடைமுறை தொடர வேண்டும்: பக்தர்கள் வரவேற்பு
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தேதி, நேரம், கிழமை ஆகியவை குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம்(டைம் ஸ்லாட்) தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தரும், தொழிலாளியுமான விஜயகுமார் கூறுகையில்:-

நானும் குடும்பத்தினரும் ஏழுமலையானை தரிசிக்க 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனத்தில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தோம். ஆனால், சில காரணங்களால் குறிப்பிட்ட நேரத்துக்கு கோவிலுக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியவில்லை. திருமலைக்கு வந்ததும், டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்குவதாக கூறினார்கள். அதைக்கேட்டு ஆதார் அட்டை மூலமாக நாங்கள் குடும்பத்தினருடன் டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டையை பெற்று ஏழுமலையானின் அருளால் விரைவில் சாமி தரிசனம் செய்தோம்.

தேவஸ்தானம் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும், என்றார்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமந்த்குமார் என்ற பக்தர் கூறுகையில்:-

நான் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். அப்போது அலிபிரி டோல்கேட்டில் ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை பற்றி அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். அந்தத் துண்டு பிரசுரங்களை வாங்கி படித்துப் பார்த்து, அந்தத் தரிசன நடைமுறையை பற்றி தெரிந்து கொண்டேன். மேலும் இதுபற்றி வெங்கடேஸ்வரா பக்தி சேனலிலும் விளம்பரம் செய்தார்கள். அதனை பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

பின்னர் தரிசனத்துக்காக திருமலைக்கு வந்ததும் டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டேன், என்றார்.

தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற பக்தர் கூறுகையில்:-

என்னுடைய முகநூலில் (பேஸ்புக்) ஏழுமலையான் கோவிலில் நடைமுறை படுத்தப்பட உள்ள டைம் ஸ்லாட் முறையை பற்றி எனது நண்பர்கள் தகவல்களை அனுப்பி வைத்திருந்தனர்.

நண்பர்கள் அனுப்பி வைத்த தகவலை படித்துப் பார்த்து, உடனடியாக திருமலைக்கு வந்து டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டேன். விரைவாக சென்று ஏழுமலையானை வழிபட இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நடைமுறை தொடர வேண்டும், என்றார்.

இந்தத் தரிசன அனுமதி அட்டை வழங்கும் திட்டம் வருகிற 23-ந் தேதி வரை தற்காலிக பரிசோதனை அடிப்படையில் தொடர்கிறது. இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ஏப்ரல் மாதத்தில் இருந்து நிரந்தரமாக நடைமுறைக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு அமோக வரவேற்பு உள்ளதால் இந்த நடைமுறையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருமலையில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு இருப்பது போல், திருப்பதியிலும் இலவச தரிசன பக்தர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com