ஏழைகளின் வியர்வையை தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் கேலி செய்வதா?: ராகுல் மீது மோடி பாய்ச்சல்

தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் ஏழைகளின் வியர்வையை கேலி செய்வதா?: என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏழைகளின் வியர்வையை தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் கேலி செய்வதா?: ராகுல் மீது மோடி பாய்ச்சல்
Published on

அகமதாபாத்:

பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மகனுக்கு எதிராக ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘பேரரசர் அமித ஷாவின் மகன் இளவரசர் ஜெய்ஷாவின் வருமானம் சில ஆண்டுகளில் பல மடங்காக அதிகரித்தது மற்றும் ரபேல் போர் விமானம் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு திருவாளர் மோடி பயந்து விட்டார். அவரது உதடுகள் ஒட்டிக் கொண்டன. முகம் சுருங்கி விட்டது. நெற்றியில் வியர்வை வழிந்தோடுகிறது’ என்னும் பொருள்பட இந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலம், பவ்நகர் மாவட்டம், பாலிட்டானா பகுதியில் இன்று நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் ஏழைகளின் வியர்வையை கேலி செய்வதா?: என ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

‘நீங்கள் (ராகுல்) தங்க கரண்டியுடன் பிறந்தவர் என்பதால் ஏழை மக்களின் வலியும், வியர்வையின் மதிப்பும் என்னவென்று எந்த காலத்திலும் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் அவர்களின் வியர்வையை நீங்கள் நைய்யாண்டி செய்கிறீர்கள்.

குஜராத் மீது உங்களுக்கு (காங்கிரஸ்) எப்போதுமே காழ்ப்புணர்ச்சி உண்டு. சர்தார் வல்லபாய் பட்டேலையும், மொரார்ஜி தேசாயையும் நீங்கள் எப்படி நடத்தினீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். இப்போது உங்களுக்கு இந்த மோடிதான் இலக்கு. அந்த வெறுப்புணர்வில் குஜராத்தை சேர்ந்த ஒருவனின் நெற்றியில் வழியும் வியர்வை உங்களுக்கு அசவுகரியமாகப்படுகிறது.

பிறக்கும்போதே கையில் தங்க கரண்டியுடன் அரச குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு எங்களது வியர்வையின் உண்மையான மதிப்பு என்னவென்று புரியாது. வறுமை அல்லது வறுமையுடன் ஒட்டியுள்ள வேதனை என்னவென்று அறியாதவர்கள் இப்போது நமக்கு போதனை செய்கிறார்கள்.

குஜராத் மக்களில் மகாத்மா காந்தி காட்டிய பாதையில் துறவியாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அரச குடும்பத்தை சேர்ந்த இன்னொரு காந்தியின் வழிதோன்றல்களும் இருக்கிறார்கள். துறவி காட்டிய பாதையில் நடப்பதா? அல்லது, தங்க கரண்டியுடன் பிறந்தவர்கள் பாதையில் நடப்பதா? என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com