நீதிபதி கர்ணன் மீதான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்

நீதிபதி கர்ணன் மீதான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.
நீதிபதி கர்ணன் மீதான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
Published on

மதுரை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது வெளியாகியுள்ள பிளஸ்-2 தேர்வில் ரேங்க் பட்டியல் முறை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் 3 ஆண்டுகளாக துணை வேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. ஒருசில பல்கலைக்கழகங்களில் பதிவாளரே இல்லை. இந்த பதவிகளை நிரப்புவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது?. இதை தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் மீது அதிக கெடுபிடிகளை காண முடிந்தது. மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்த பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. தேசிய அளவில் தேர்வு நடக்கும்போது ஒரே மாதிரியான கேள்விகள் தான் இடம்பெற வேண்டும். ஆனால் குஜராத் மாநிலத்தில் எளிமையாகவும், மேற்கு வங்காளம், கேரளாவில் கடினமாகவும் கேள்விகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

நீதிபதி கர்ணன் வி‌ஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிபதி கர்ணன் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு மறு பரீசிலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பல இடங்களில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் சிங்கள அரசை மத்திய அரசு பகைக்காது என்பதை எடுத்துக்காட்டுகிறது. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இடங்களையும் பிரதமர் மோடி பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்தித்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com