சாதியவாதத்தை வன்கொடுமை என ஐ.நா.சபை அங்கீகரிக்க வேண்டும் - திருமாவளவன்

சாதியவாதத்தை வன்கொடுமை என அங்கீகரித்து ஐநா சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமெரிக்க சர்வதேச மாநாட்டில் திருமாவளவன் கூறியுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்ற திருமாவளவன் எம்.பி
மாநாட்டில் பங்கேற்ற திருமாவளவன் எம்.பி
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அமெரிக்கா நியுஜெர்சியில் நடைபெற்ற ‘சாதிய ஒடுக்கு முறைகள் மற்றும் அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள்’ என்னும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். திருமாவளவன் மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:-

இந்தியாவில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்கள் இருக்கின்றன. தலித் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சாதியின் பெயரால் பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

சாதி என்னும் அமைப்பு மனுதர்மம், இந்துத்துவம் மற்றும் பிராமணியம் என்ற பெயரில் உயர்சாதி என கருதப்படுபவர்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் கட்டிக்காப்பாற்றப்பட்டு வருகிறது. மனுதர்மத்தின் அடிப்படையில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.

இந்தியாவில் சாதிமுறையை ஒழிப்பதற்கு அரசியல்ரீதியாக நாங்கள் போராடி வருகிறோம். உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஆதரவு இல்லாமல் சாதியை ஒழிப்பது எளிதானது அல்ல. எனவே, எங்களுக்கு உலக அளவில் பாராளுமன்றத்தினரின் ஆதரவு தேவை. முதலில் நாம் இந்த பிரச்சினையை ஐ.நா சபையில் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

ஐ.நா சபை இனவாத ஒழிப்பை அங்கீகரித்தது மற்றும் இனவெறியால் நடைபெற்ற வன்கொடுமைகளை அகற்றுவதற்கான தீர்வைக் கண்டறிந்தது. ஆனால், ஐநா சபையில் சாதிஒழிப்புக்கான திட்டங்கள் ஏதும் இதுவரையில் இல்லை.

எனவே, ‘சாதியவாதம்’ என்பது ஒரு ‘வன்கொடுமை’ என உலகளவில் அங்கீகரிக்க, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பிரச்சனையை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சாதியவாத பிரச்சனையை அரசாங்கத்தின் மூலமாகவோ அல்லது செனகல் அரசாங்கத்தின் மூலமாகவோ ஐ.நா.சபையில் எழுப்ப வேண்டுமென அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இனவாதத்தை போல் சாதியவாதமும் ஒரு வன் கொடுமை என அங்கீகரித்து ஐநா சபை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com