

திருச்சியில் நாளை விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, முன்னேற்பாடுகளை பார்வையிட திருச்சிக்கு விமானம் மூலம் இன்று காலை கட்சி தலைவர் திருமாவளவன் வந்தார். விமானநிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
திருச்சியில் நாளை (சனிக்கிழமை) விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தேசம் காப்போம், பேரணி நடைபெறுகிறது. தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இந்திய குடியுரிமை பதிவேடு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த பேரணி திருச்சி எம்.ஜி.ஆர். சிலையிலிருந்து உழவர் சந்தை வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பேரணியில் 5000 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களை தவிர மற்ற கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. பேரணி குறித்து இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.