ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு குறித்து அவர்களிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களின் 4 அம்ச முதன்மைக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில், அதுபற்றி பேச்சு நடத்தக்கூட பினாமி அரசு தயாராக இல்லை. இது கண்டிக்கத்தக்கது.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஐம்பதுக்கும் அதிகமான கோரிக்கைகளை முன் வைத்துள்ள போதிலும், உடனடியாக நிறைவேற்றும் படி அவர்கள் வலியுறுத்துவது நான்கு கோரிக்கைகள் தான். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்,

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்; அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஒப்பந்த பணி முறையை ஒழித்து விட்டு அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஆகும். இவற்றில் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்ற முடியாதவை அல்ல. அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது சாத்தியமும் இல்லை. அடுத்த சில மாதங்களில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நெருக்கடி ஏற்படும் என்பது அரசுக்கும் தெரியும்.

அ.தி.மு.க. இணைப்புக்காக சென்னைக்கும், தில்லிக்கும் பறந்து பறந்து பேச்சு நடத்திய முதல்வருக்கு, அரசு ஊழியர் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச நேரமில்லாதது கேலிக்கூத்து.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம் என தமிழக அரசு நினைத்தால், மிகமோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் மக்களுக்கும், மாணவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளையும், செப்டம்பர் 7 முதல் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளவிருக்கும் போராட்டங்களை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ, ஜியோ என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போராடி வருகிறார்கள்.

கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினர். ஆகஸ்டு 16-ந்தேதி தங்களது கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பிரசார இயக்கங்களை நடத்தினர். அரசு இதுவரை அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தவிர்க்க முடியாமல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களை மிரட்டுகிறது. இது கண்டனத்திற்குரியது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் அரசுப் பணியாளர்கள்- ஆசிரியர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு தலைவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com