

நாகர்கோவில்:
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் நடவடிக்கைகளை, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நடைமுறைப்படுத்தி, எடுத்த துரித நடவடிக்கைகளினாலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் தீவிர கண்காணிப்பினாலும், நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பிற துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொண்ட சுகாதார நடவடிக்கைகளாலும், நமது மாவட்டம் சிவப்புநிற அடையாளத்தில் இருந்து ஆரஞ்சு நிற அடையாளத்திற்கு குமரி மாவட்டம் வந்துள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நமது மாவட்டத்தை சார்ந்த ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, அவர்களது சிரமத்தை அறிந்து, ஊரடங்கில் ஒரு சில நிபந்தனைகளை தளர்த்தியுள்ளார்கள். அதன் அடிப்படையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவின் பேரில் மீன்வலை தயாரிக்கும் கம்பெனி மீண்டும் செயல்பட தொடங்கியது.
செங்கல் சூளைதொழில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பட உள்ளது. ரப்பர் கையுறை தொழில் நாளை (புதன்கிழமை) முதலும், தென்னைநார் தொழில் 8-ந் தேதி முதலும், தனிக்கடைகள் 9-ந் தேதி முதல் இயங்கிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தற்போது உள்ள தளர்வுகளை பயன்படுத்தி, வீட்டிற்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முக கவசம் அணிந்து, தங்கள் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி வாங்கி செல்ல வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று, கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தக்கூடாது.
அவசியமின்றி வெளியூருக்கும், வெளி மாவட்டங்களுக்கும் செல்வதை தவிர்த்திட வேண்டும். சிவப்பு நிற அடையாளத்தில் இருந்து, ஆரஞ்சு நிற அடையாளத்திற்கு மாறுவதற்கு உறுதுணையாக இருந்த பொதுமக்கள், பச்சை நிற பட்டியலில் நமது மாவட்டத்தை கொண்டுசேர்க்க அனைவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.