

விருதுநகர்:
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடிப்பதால் பொதுமக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக சிறிய வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழக அரசு ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது சமூக இடைவெளியை பின்பற்றி அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளுடன் 34 வகையான கடைகளை இயக்க அனுமதி அளித்துள்ளது.
வடமாவட்டங்களைவிட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட கலெக்டர்கள் கூடுதல் கடைகளை திறக்க அனுமதி வழங்கி வருகின்றனர்.
அதன்படி மதுரை நகரில் நேற்று முதல் சிறிய அளவிலான ஜவுளி, நகை, காலணி கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விருதுநகர் மாவட்டத்தில் சிறிய கடைகளை திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கலெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் இன்று முதல் மாவட்டத்தில் ஜவுளி, நகைக்கடைகள், விசைத்தறி கூடங்கள், நூற்பாலை, சிறிய பட்டாசு உற்பத்தி ஆலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ ஏதுவாக கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். ஜவுளி கடையில் அதிகபட்சமாக 20 பேரும், நகைக்கடை, பட்டறையில் 10 பேரும் பணியில் இருக்கலாம்.
விசைத்தறி கூடங்கள், நூற்பாலைகள், ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் விதிமுறைகளை பின்பற்றி இயங்க வேண்டும்.
மேற்கண்ட கடைகள், ஆலைகளை இயக்க அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் இயங்க கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய மேலாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் இன்று பஜார் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் சிறிய ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. 51 நாட்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டதால் ஊழியர்கள் மீண்டும் வேலைக்கு வந்திருந்தனர்.
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் குறைந்த தொழிலாளர்களுடன் இயங்கின. சிவகாசியில் மிக சொற்ப அளவில் சிறிய பட்டாசு ஆலைகள் இன்று திறக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், உடனடியாக ஆலையை திறந்து உற்பத்தியை தொடங்குவது சாத்தியமற்றது. ஆலைகள் முழுமையாக இயங்க ஒரு வாரம் ஆகும். இருப்பினும் விரைவில் சிறிய பட்டாசு ஆலைகளை முழு அளவில் இயக்க பணியாற்றி வருகிறோம் என்றனர்.